திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்காக சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (டிசம்பர் 2) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

அதற்காக நாளை அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும். இதையடுத்து பிரம்ம தீர்த்தத்தில் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். மாலையில் பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்பாக எழுந்தருள்வார்கள். மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படும். அதே நேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.மகாதீபம் ஏற்றிய பிறகே வீடுகளில் விளக்குப் போடுவார்கள்.
கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பக்தர்களின் வசதிக்காகத் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை நகருக்குள் வாகனங்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு வரும் 9 சாலைகளிலும் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் கிரிவலப் பாதையிலும், தற்காலிகப் பேருந்து நிலையங்களிலும் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பேருந்து நிலையத்தில் இருந்து மற்றொரு பேருந்து நிலையத்திற்குச் செல்ல ஆட்டோ வசதி செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணிகளுக்காக 8,500 போலீஸார் திருவண்ணாமலையில் குவிக்கப்பட்டுள்ளனர். கோயில் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆளில்லா குட்டி விமானம் மூலம் பக்தர்கள் கூட்டம் கண்காணிக்கப்பட உள்ளது. கிரிவலப் பாதையில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.�,