சரிவை நோக்கி சர்க்கரை உற்பத்தி!

Published On:

| By Balaji

காலநிலை மாற்றம் மற்றும் பூச்சித் தாக்குதலால் இந்த ஆண்டு சர்க்கரை உற்பத்தி குறையும் என்று மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த சர்க்கரை உற்பத்தியில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டும் 80 விழுக்காடு அளவுக்கு உற்பத்தி மதிப்பைக் கொண்டுள்ளன. இந்த மாநிலங்களிலும் இந்த ஆண்டு கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் பெய்த கனமழையால், உத்தரப் பிரதேசத்தின் கரும்பு சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் சில இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மகாராஷ்டிராவிலும், வடக்கு கர்நாடகாவிலும் கனமழையாலும், பூச்சித் தாக்குதலாலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால் இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் மதிப்பீட்டின்படி 31.5 லட்சம் டன் அளவிலான சர்க்கரை உற்பத்தி குறையும் என்று மதிப்பிட்டுள்ளது. முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் 135 லட்சம் டன்னும், மகாராஷ்டிராவில் 115 லட்சம் டன்னும், கர்நாடகாவில் 44.2 லட்சம் டன்னும் சர்க்கரை உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது உத்தரப் பிரதேசத்தில் 121 லட்சம் டன்னும், மகாராஷ்டிராவில் 108 லட்சம் டன்னும், கர்நாடகாவில் 42 லட்சம் டன்னும் மட்டுமே சர்க்கரை உற்பத்தியாகும் என்று இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் மதிப்பிட்டுள்ளது.

அதே சமயத்தில் சர்க்கரை ஆலைகள் மொலாசிஸ் விநியோகத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் பி-மொலாசிஸ் விலையை உயர்த்த புதிய கொள்கையை ஒன்றிய அரசு அறிவித்ததே இதற்குக் காரணம் என்றும் சர்க்கரை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share