கெய்ல்: ராயல் சேலஞ்சர்ஸ் நம்பிக்கை துரோகம்?

Published On:

| By Balaji

கிறிஸ் கெய்லுக்கு மட்டுமா ஆச்சரியம், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்குமே ராயல் சேலஞ்சர்ஸ் அணி கெய்லை ஏலத்தில் எடுக்காதபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிரடிக்குப் பாடமெடுத்த கெய்ல், அணியில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தும், ஏன் எடுக்கவில்லை என்ற குழப்பம் நீடித்துக்கொண்டே இருந்தது. இதில் பெங்களூர் அணி மீது தவறா, கெய்ல் மீது தவறா என்றெல்லாம் விவாதங்கள் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்துகொண்டிருக்க, தற்போது மௌனத்தைக் கலைத்துப் பேசியிருக்கிறார் கெய்ல்.

ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏலத்தில் தன்னை எடுக்காதது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது என்கிறார் கெய்ல். “ஐபிஎல் போட்டிக்கான ஏலம் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்புவரை, பெங்களூர் அணி நிர்வாகத்தினர் என்னுடன் பேசிக்கொண்டிருந்தனர். ஏலத்தில் கண்டிப்பாக என்னை எடுப்பதாக வாக்குறுதி கொடுத்ததுடன், வேறு எந்த கமிட்மெண்டும் வேண்டாம் என்றார்கள். நானும் அவர்கள் பேச்சை நம்பியிருந்தேன். ஆனால், ஏலத்தில் அவர்கள் என்னை வாங்குவதற்கு முயன்றுகூடப் பார்க்கவில்லை என்று அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. பிறகு, என்னுடைய ஆரம்ப விலையான 2 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியதாக அறிந்தேன். எவ்வளவு பணமாக இருந்தாலும் சரி, என்னை நம்பி விலைக்கு வாங்கிய அணியின் வெற்றிக்குப் பங்களிப்பது என் கடமை” என்று Cricbuzz இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு “எந்த அணியுடன் விளையாடினாலும் என் நோக்கம் ரன் சேர்ப்பதும், வெற்றி பெறுவதுமாகத்தான் இருக்கும். பெங்களூருடன் பஞ்சாப் மோதிய முதல் போட்டியில் இடம்பெற முடியாமல்போனது துரதிர்ஷ்டவசமானது. இரண்டாவது போட்டிக்காகக் காத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார் இந்த அதிரடி ராஜா.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share