இறைச்சி: மாநகராட்சி அறிக்கை அளிக்க உத்தரவு!

Published On:

| By Balaji

சென்னை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி அழிக்கப்பட்டது தொடர்பாக, சென்னை மாநகராட்சி அறிக்கை அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 17ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரிலிருந்து சென்னை எழும்பூர் வந்த ரயிலில் 2,100 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது நாய் கறியா அல்லது கெட்டு போன ஆட்டிறைச்சியா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை உணவுத் துறை அதிகாரிகள் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், ரயில்வே காவல் துறை பதிவு செய்த வழக்கில் விலங்குகள் கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட முக்கிய சட்டப்பிரிவுகள் சேர்க்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் வெளிமாநிலங்களில் இருந்து இறைச்சியைக் கொண்டு வருவதற்கான விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (நவம்பர் 23) விசாரணைக்கு வந்தது. அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள் ஆய்வுக்குக் கால்நடை மருத்துவ பல்கலை கழகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வு செய்ததில் ஆட்டு இறைச்சி என்று தெரியவந்தது. இருப்பினும் அந்த இறைச்சி சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் அதை மாநகராட்சி அழித்துவிட்டது” என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதைக்கேட்ட நீதிபதிகள் எந்த விதியின் கீழ் இறைச்சிகள் அழிக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த வழக்கில், சென்னை மாநகராட்சியையும் பிரதிவாதியாக சேர்த்துள்ள, நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share