இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
நேற்று(ஆகஸ்டு 24) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 236 ரன்களை சேர்த்தது. அதில் இலங்கை வீரர் குணதிலகாவை ஸ்டம்பிங் மூலம் டோனி வெளியேற்றினார். ஸ்டம்பிங் முறையில் சிறந்து விளங்கும் தோனி இந்திய அணி வெற்றிபெற பல்வேறு நேரங்களில் தனது சாதுரியமான கீப்பிங் திறமையைக் கொண்டு உதவி உள்ளார். அதேபோல் நேற்றைய போட்டியிலும் குணதிலகா விக்கெட்டினை வீழ்த்தி உதவினார். இது அவர் செய்த 99ஆவது ஸ்டம்பிங் ஆகும். இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககரா 404 ஒருநாள் போட்டிகளில் 99 ஸ்டம்பிங் செய்து இதுவரை முதல் இடத்தில் இருந்தார்.

நேற்றைய போட்டியில் ஸ்டம்பிங் செய்த தோனி இந்த உலக சாதனையை சமன் செய்துள்ளார். இன்னும் ஒரு ஸ்டம்பிங் செய்தால் அதிக ஸ்டம்பிங் செய்த வீரர் என்ற பெருமையை படைப்பார் தோனி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 9 ஆவது வீரராகக் களமிறங்கி 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் புவனேஸ்வர் குமார் இடம்பெற்றார். இதற்கு முன்னர் பிரவீன் குமார் (54), மதன் லால் (53), இர்பான் பதான் (50) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அவர்களுடன் தற்போது புவனேஸ்வர் குமார் (53*) இணைந்துள்ளார்.
அதேபோல் அதிக ரன்களையும் வழங்கி 6 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இலங்கை வீரர் தனன்ஜெயா பெற்றுள்ளார். அதேபோல் ஒரு அணியின் பந்துவீச்சாளர் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய போதும் அந்த அணி தோல்வியைத் தழுவியது இதுவே இரண்டாம் முறை. இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 2003ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் ஜிம்பாப்வே அணி த்ரில் வெற்றிபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிடேல் எட்வர்ட்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

அதுமட்டுமின்றி நேற்று விளையாடிய போட்டி இலங்கை அணியின் 800ஆவது ஒருநாள் போட்டியாகும். அதில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இலங்கை அணி 800ஆவது போட்டிகளில் தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது. அதில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.
