அரசியல் சட்டத்தை பாஜக மதிப்பதில்லை: டி.ராஜா

Published On:

| By Balaji

‘அரசியல் சட்டத்தை மதித்துச் செயல்படும் கட்சியாக பாஜக இல்லை’ என்று விமர்சித்துள்ள டி.ராஜா, மக்களின் தீர்ப்புக்கு எதிராக பாஜக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா திருச்சியில் இன்று (மே 20) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இல்லை என்பது தெளிவாக இருந்தது. காங்கிரஸ், மஜத கூட்டணிக்கு போதுமான அளவுக்கு அதிகமாக இருந்தது. இருந்தபோதிலும் ஆளுநர் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார். இது, கடும் கண்டனத்துக்கு உரியது.

ஆளுநர் இப்படிச் செயல்படலாமா? ஆளுநர் என்பவர் இந்திய அரசியல் சட்டத்துக்குட்பட்டுச் செயல்பட வேண்டும். அதைப் புறக்கணித்துவிட்டு , பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்குச் சாதகமாக செயல்பட வேண்டும் என்பதாக பாஜக தலைவரை ஆட்சியமைக்க அழைத்தார். இப்போது, அவர்கள் சட்டப்பேரவையில் தோல்வியை ஒப்புக்கொண்டு ராஜினாமா செய்துள்ளனர். இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. முதலாவது, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பாஜக சகலவித சாகசங்களையும் செய்வது அம்பலமாகியுள்ளது.

மக்களுடைய தீர்ப்பு என்ற பெயரால், மக்களின் தீர்ப்பையே மாற்றுவதற்கும் புறக்கணிப்பதற்குமான பல நடவடிக்கைகளை பாஜக செய்து வருகிறது. இதை கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், நாகாலாந்து போன்ற பல்வேறு மாநிலங்களில் பார்க்க முடிந்தது. பீகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று மகா கூட்டணி வெற்றி பெற்று மக்கள் தீர்ப்பை பெற்றது. ஆனால், பாஜக மக்கள் தீர்ப்பையே உடைத்தது. அந்தக் கூட்டணியையே உடைத்து நிதித் தலைமையிலான ஜனதாதளத்தோடு சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றியது.

அரசியல் சட்டத்தை மதித்துச் செயல்படும் கட்சியாக பாஜக இல்லை. அதிகாரத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும்; நாடு முழுவதிலும் தனது அதிகாரத்தை எப்படியாவது செயல்படுத்த வேண்டும் என்ற வெறித்தனத்தில் பாஜகவினர் செயல்படுகின்றனர். இது கர்நாடகாவில் அம்பலமாகியுள்ளது.

மற்றொருபுறம், ஆளுநர் என்பவர் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டுமா… ஆளுங்கட்சிக்கு எடுபிடியாக, அவர்களின் அதிகாரங்களுக்குச் சார்ந்து செயல்பட வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, ஆளுநரைத் தேர்வு செய்வது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

கர்நாடகத் தேர்தல் முடிவுகளில் இருந்து, இந்தியாவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் உரிய படிப்பினையை பெற்று, முடிவெடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மோடி பிரதமராகப் பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவடையவுள்ளது. இந்த நான்காண்டுகளில் தனது சாதனை என்று எதையும் மோடியால் சொல்ல முடியாது” என்று விமர்சித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share