தமிழ்நாட்டில் இரண்டு மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட க்யூ பிராஞ்ச் போலீசாரை டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டியுள்ளார்.
யார் இந்த மாவோயிஸ்டுகள்? பின்னணி என்ன?
மருத்துவம், தொழிற்சாலைகள், கல்விக் கூடங்களை பொதுவுடைமையாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராட்டம் செய்வதாக கூறி கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா (மாவோயிஸ்ட்), தமிழ்நாடு, கேரளா , கர்நாடகா ஆகிய பகுதிகளில் செயல்பட்டது,
மார்க்சிய சிந்தனை- மாவோயிஸ்ட் வழி, அதாவது நேரடியாக மக்களை திரட்டி ஆயுத போராட்டம் மூலமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது என்ற கொள்கையுடன் செயல்பட்டு வந்த இந்த அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.
இந்த அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த, மத்திய குழு உறுப்பினரான சஞ்சய் தீபக் ராவ் 2023 இறுதியில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்த அமைப்பில் இருந்துள்ளனர்.
குறிப்பாக இந்த அமைப்பில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் ,பொள்ளாச்சியை சேர்ந்த சந்தோஷ் இருவரும் 14 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தனர்.
இவர்களை எஸ்.பி.சுந்தரவதனம், ஏடிஎஸ்பி ராஜ் பாபு தலைமையில் க்யூ பிரிவு போலீசார் தேடி வந்தனர்.

ஆதார் கார்டு கிடையாது… அடையாளமும் தெரியாது!
பொதுவாக தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கங்களில் உள்ளவர்கள் பல்வேறு புனை பெயர்களில் செயல்படுவார்கள். அதாவது போகும் இடத்தில் ஒரு பெயரை வைத்துக்கொள்வார்கள். எந்த விதத்திலும் அடையாளம் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
ஐடி கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவை இவர்களுக்கு இருக்காது. இவர்களை பிடிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
காரணம் மக்களோடு மக்களாக வாழக்கூடியவர்கள். தங்களின் அடையாளத்தையும் அடிக்கடி மாற்றிக்கொள்வார்கள்.
எனவே, இவர்களது நட்பு மற்றும் உறவு வட்டாரத்தை கண்காணித்து, அதனடிப்படையில் தான் க்யூ பிரிவு போலீசார் கண்டுபிடிப்பார்கள். இவர்களது புகைப்படத்தையும் வெவ்வேறு தோற்றத்தில் க்யூ பிரிவினர் வைத்திருப்பார்கள்.
க்யூ பிரிவு போலீசாரும் தங்களை போலீஸ் என்று அடையாளம் காட்டிக்கொள்ளாமல் விவசாயிகள், கடை ஊழியர்கள், வியாபாரிகள் போல் இருந்துகொண்டு கண்காணிப்பார்கள்.
பிறகு அந்தநபர் எங்கெங்கு செல்கிறார் என்று அனைத்து மூவ்மென்ட்டுகளையும் கண்காணித்து கைது செய்ய தயாராவார்கள்.

பிடிபட்டது எப்படி?
அந்த சமயத்தில் பொதுமக்கள் போலவே, அந்த நபரை சுற்றி க்யூ பிரிவு போலீசார் 5 பேர் இருப்பார்கள். அவர்கள் 5 பேருமே இடுப்பிலோ, அல்லது கழுத்திலோ துண்டு கட்டியிருப்பார்கள். கையில் பிஸ்டல் வைத்திருப்பார்கள்.
அவர் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்தான் என உறுதி செய்த பின்னர், பின்னால் இருந்து சென்று ஒரு க்யூ பிரிவு போலீசார் அந்த நபரை இறுக்கி பிடித்துக்கொள்வார். பிறகு மற்ற போலீசாரும் அங்கு வந்துவிடுவார்கள். அந்த நபர் எதிர்தாக்குதல் நடத்தாத வகையில் கையை துண்டால் கட்டிவிடுவார்கள். முழக்கம் போட்டுவிடக்கூடாது என்பதற்காக வாயையும், எங்கு அழைத்து செல்கிறார் என தெரியாததற்காக கண்ணையும் கட்டி விடுவார்கள்.
இப்படித்தான் தேனியை சேர்ந்த கார்த்திக்கை பிப்ரவரி 20ஆம் தேதி மாலை மெரினா பீச் ஓரத்தில், கண்ணகி சிலை அருகே பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த போது கைது செய்தனர். அவரைத் தொடர்ந்து சந்தோஷையும் கைது செய்தனர். Two Maoists arrested in Tamil Nadu

எத்தனை பெயர்கள்…
இதுகுறித்து காவல்துறை தலைமை இன்று (பிப்ரவரி 22) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“கார்த்திக் (எ) சின்ன கார்த்திக் (எ) பன்னாபுரம் கார்த்திக் (எ) ராஜேஷ் (எ) குமார் (எ) கௌதம் கார்த்திக் என்பவரை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர். இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்டு) இயக்கத்தில் இணைந்து 2011 ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்தார். இவர் அவ்வியக்கத்தில் இணைந்த பின்னர் அதன் நடவடிக்கைகளை பரப்புவதில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்டு) இயக்கத்தில் உறுப்பினராக இருந்த இவர். தமிழ்நாடு மட்டுமின்றி இதர மாநிலங்களிலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவ்வியக்கத்தில் இணைந்த பின்னர். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு முச்சந்திப்பில் அவ்வியக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக கேரள மாநில வனப்பகுதியில் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளார்.
அதுமட்டுமின்றி. மேற்படி கார்த்திக் அவ்வியக்கத்திற்கு ஆதரவாக சட்டவிரோத செயல்களை மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாட்டில் பல குற்ற வழக்குகளிலும் ஈடுபட்டுள்ளார்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக இவர் மீது கொச்சி தேசிய புலனாய்வு முகமையில் (NIA) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு மாநில காவல்துறையினரும். உளவுத் துறையினரும் தேடி வந்த தலைமறைவு மாவோயிஸ்டு உறுப்பினரான இவரை தமிழ்நாடு க்யூ பிரிவினர் கைது செய்தனர்.
இவர் மீது சென்னை மாநகர க்யூ பிரிவில் குற்ற எண் 2/2025ன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த மாவோயிஸ்டு உறுப்பினரான இவரை கைது செய்த க்யூ பிரிவு அதிகாரிகளை தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டினார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. Two Maoists arrested in Tamil Nadu
இதே நேரம் நமது விசாரணையில், கார்த்திக் போலவே சந்தோஷ் என்கிற மாவோயிஸ்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. ஒரு மாவோயிஸ்ட் கைது பற்றி அறிவித்துள்ள போலீஸார், மற்றொரு மாவோயிஸ்ட் கைதையும் விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். Two Maoists arrested in Tamil Nadu