வால்பாறையில் வாட்டர் பால்ஸ் ஊமையாண்டி முடக்கு பகுதியில் இன்று அதிகாலை (அக்டோபர் 13) காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையின் பல பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உணவுக்காக காட்டை விட்டு வெளியே வரும் யானைகள், அப்பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் வீடுகளில் புகுந்து அங்கிருக்கும் அரிசியை சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைக் கூட்டங்கள் வராமல் இருக்க வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
வால்பாறை கடம்பாறை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மாரிமுத்து, அவரது மனைவி சுகன்யா, குழந்தை ஹேமாஸ்ரீ மற்றும் பாட்டி அசலா (55) வசித்து வந்தனர். இன்று அதிகாலை 3.45 மணியளவில் மாரிமுத்துவின் வீட்டின் ஜன்னலை ஒரு யானை தட்டியது. யாரோ கதவைத் தட்டுகிறார்கள் என நினைத்து, அசலா தனது பேத்தியைத் தூக்கிக்கொண்டு கதவைத் திறந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக காட்டு யானை அசலாவைத் தாக்கியது. கீழே விழுந்த குழந்தையையும் மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது.
தகவல் அறிந்து அங்கு வந்த வேட்டைத் தடுப்பு காவலர்கள் யானையை விரட்டிவிட்டு, உயிருக்கு போராடிய அசலாவை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தற்போது இருவரது உடலும் பிரேதப் பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு உள்ள யானைக் கூட்டத்தை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
யானை நடமாட்டத்திற்குப் பயந்து மக்கள் வீடுகளில் முடங்கும் சூழலில், வீடு புகுந்து யானை தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
