அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ஆதரவாளர்களான முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பழனி சுப்புரத்தினம் மற்றும் சிவகாசி பாலகங்காதரன் ஆகியோர் இன்று (ஜனவரி 8) திமுகவில் இணைந்தனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இவர்கள் இருவரும் திமுக உறுப்பினர்களாக இணைந்துகொண்டனர்.
பழனி சுப்புரத்தினம்: 1991-1996 காலகட்டத்தில் பழனி சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ் அணியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இதேபோல் சிவகாசி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சிவகாசி பாலகங்காதரன்.
இவர்கள் இருவரும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் இணைந்துள்ளனர். ஓ.பி.எஸ் அணியில் இருந்து அண்மையில் மனோஜ் பாண்டியன் போன்றோர் திமுகவில் இணைந்த நிலையில், இந்த இணைப்பும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
