மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஜனவரி 4-ந் தேதி 2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகை தருகிறார்.
திருச்சிக்கு இன்று காலை தனி விமானம் மூலம் அமித்ஷா வருகை தருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை செல்கிறார். புதுக்கோட்டை- திருச்சி சாலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார பயண நிறைவு பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் அமித்ஷா பங்கேற்கிறார்.
இதனையடுத்து திருச்சி திரும்பும் அமித்ஷா, இன்று இரவு நட்சத்திர விடுதியில் தங்குகிறார். அங்கு பாஜகவின் மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பலரையும் அமித்ஷா சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நாளை ஜனவரி 5-ந் தேதி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார் அமித்ஷா. மேலும் திருச்சி அருகே மன்னார்புரத்தில் நடைபெறும் மோடி பொங்கல் விழாவிலும் அமித்ஷா பங்கேற்கிறார். இதன் பின்னர் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார் அமித்ஷா.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், திமுகவை ஆட்சி அரியணையில் இருந்து இறக்கி தமிழகத்தை மீட்டெடுக்கும் நமது வேள்விப் பயணமான “தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்” என்ற யாத்திரையின் நிறைவு விழாவிற்கு வருகை தரும் அமித்ஷாவை மனதார வரவேற்கிறேன்! இப்பெருவிழாவில் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன் என கூறியுள்ளார்.
