பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.
கோவையில் கடந்த இரண்டு நாட்களாக பாஜக, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் கார் எரிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
இந்த சம்பவங்கள் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று (செப்டம்பர் 25) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

”குனியமுத்தூர் பகுதியில் பிற்பகல் நேரத்தில் ரகு என்பவர் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் எரிபொருளை ஊற்றித் தீவைத்தார்.
அதே நாள் இரவு 11 மணியளவில் குனியமுத்தூர் பகுதியில் பரத் என்ற பாஜக நிர்வாகி வீட்டின் முன் மண்ணெண்ணெய் பாட்டிலை ஒருவர் வீசி சென்றனர். இந்த இரண்டு சம்பவத்திற்கும் வழக்குப் பதிவு செய்துள்ளோம்.
இந்த இரண்டு வழக்கிலும் தனித்தனியாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தொடர்ந்து நுண்ணறிவு சேகரித்தும், கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்தும், மற்ற வகையில் புலன் விசாரணை செய்தும்,
இன்று (செப்டம்பர் 25 ) பிற்பகல் 2 மணிக்கு மேல் மதுக்கரை அறிவுடை நகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் மற்றும் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த இலியாஸ் ஆகிய இரண்டு நபர்களை குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் கைது செய்துள்ளார்.
இவர்கள் இரண்டு பேருமே எஸ்.டி.பி.ஐயில் பொறுப்பாளராக இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் காவல் துறை விசாரணைக்குப் பிறகு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவார்கள்.
கோவை மாநகரத்தை பொறுத்தவரையில் பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக 1 வழக்கு உள்ளது. இந்த வழக்குகளில் நிறைய முன்னேற்றம் இருக்கிறது. குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்.
மேலும் குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்காக பல்வேறு படைப் பிரிவுகள் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளூர் போலீஸ், தமிழ்நாடு சிறப்பு போலீஸ், ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ், ஆர்.ஏ.எஃப். ஃபோர்ஸ் ஆகியவற்றிலிருந்து அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
மேலும் இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்த பிறகு சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.
ஏற்கனவே பல்வேறு மத அமைப்பினை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அவர்களும் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ளார்கள்.
தற்போது கோவை மாநகரம் அமைதியாக இருக்கின்றது, எந்த பதற்றமான சூழலும் ஏற்படவில்லை.
பதிவு செய்த வழக்குகளில் கூடிய விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்று செய்தியாளர்களிடம் பேசினார்.
மோனிஷா
Comments are closed.