ட்விட்டர் லோகோவான நீலக்குருவியை நிரந்தரமாக நீக்கி ’X’ ஆங்கில எழுத்தை புதிய லோகோவாக இன்று (ஜூலை 24) அதிகாரப்பூர்வமாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு எலான் மஸ்க் வாங்கினார். அந்நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்ற அவர், பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்தார்.
பணி நடைமுறைகள் சார்ந்து புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார். பயனாளர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளை அதிகாரப்பூர்வமானதாக மாற்றுவதற்குக் கட்டணம் உட்பட புதிய மாற்றங்களை அவர் அறிவித்தார்.
அதன் தொடர் நடவடிக்கையாக ட்விட்டரின் லோகோவை மாற்ற இருப்பதாக எலோன் மஸ்க் கூறி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் ட்விட்டரின் சிஇஓ-வாக, லிண்டா யாக்காரினோவை நியமித்தார். அப்போது அவர் ட்விட்டரை ‘எக்ஸ்’ நிறுவனமாக மாற்றும் திட்டம் பற்றி குறிப்பிட்டார்.
இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டரின் அடையாளமான நீலக் குருவி லோகோவுக்குப் பதிலாக டோஜ்காயின் கிரிப்டோ கரன்சியின் நாய் படத்தை லோகோவாக வைத்தார். எனினும், விரைவிலேயே மீண்டும் நீலக் குருவியை லோகாவாக கொண்டு வந்தார்.
இந்த நிலையில் சிறந்த லோகோ கிடைக்கும்பட்சத்தில் இன்று இரவே ட்விட்டரின் லோகோ மாற்றப்பட்டுவிடும் என்று எலோன் மஸ்க் ட்விட்டரில் நேற்று அறிவித்தார்.
அதன்படி ட்விட்டர் லோகோவான நீலக்குருவியை நிரந்தரமாக மாற்றி ’X’ ஆங்கில எழுத்தை புதிய லோகோவாக இன்று அதிகாரப்பூர்வமாக அப்டேட் செய்துள்ளார்.
𝕏
— Elon Musk (@elonmusk) July 24, 2023
மேலும், twitter.com இணையதள முகவரியும் ’x.com’ ஆக மாற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து இப்போது ட்விட்டரை எவ்வாறு அழைப்பது என்றும், ட்விட்டரின் பழைய லோகோவிற்கு அஞ்சலி செலுத்தியும் நெட்டிசன்கள் அலப்பறை செய்து வருகின்றனர்.
Bye our friend🙏🏻 You will be missed.#TwitterX #TheX #GoodbyeTwitter #TwitterIsDead #RIPTwitter pic.twitter.com/XQE6OB2CoM
— Fresa @ 🦋 (@FresaFluffyFox) July 24, 2023
அதேவேளையில் ட்விட்டரை வாங்கியதில் இருந்தே பல்வேறு மாற்றங்கள் செய்து வரும் எலோன் மஸ்க், வரும் காலங்களிலும் X லோகோவில் மாற்றங்கள் இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் ட்விட்டரை சமூகவலைதளம், மெசேஜிங், பணப் பரிவர்த்தனை என அனைத்து செயல்பாடுகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வகையில் ஒரே செயலியாக மாற்றவும் எலோன் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பி.எஃப் வட்டி விகிதம் அதிகரிப்பு!
அவசரமாக நீக்கப்பட்ட அம்பேத்கர் படங்கள்: வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
