அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தவெகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டியே என விஜய் பேசிய நிலையில், அதற்கு அதிமுக தலைவர்கள் பதிலடி அளித்து வருகின்றனர். tvk vs dmk : admk reply to vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (மார்ச் 28) நடைபெற்றது.
இதில் பேசிய விஜய், “2026 இல் மாபெரும் அரசியல் மாற்றத்தை கொண்டுவர உறுதியாக இருக்கிறோம். இதுவரை சந்திக்காத ஒரு தேர்தலை தமிழ்நாடு அடுத்த வருடம் சந்திக்கும். இரண்டே இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டி.வி.கே. இன்னொன்று டி.எம்.கே. நம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நிச்சயம்” என்று விஜய் பேசியிருந்தார்.
தமிழகத்தில் திமுக – அதிமுக இடையே தான் பல ஆண்டுகளாக போட்டி நிலவி வரும் நிலையில், தவெக – திமுக என்று விஜய் இன்று பேசியிருப்பது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அவரது பேச்சுக்கு பதில் கொடுக்கும் விதமாக அதிமுக தலைவர்கள் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “தனது கட்சியினரை ஊக்கப்படுத்தும் விதமாக விஜய் பேசியுள்ளார். உண்மையில் போட்டி திமுகவிற்கும் – அதிமுகவிற்கும் தான்” எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் செம்மலை பேசுகையில், “தவெக – திமுக போட்டி என்பது விஜய்யின் பேராசை” எனத் தெரிவித்துள்ளார்