திணறும் திருச்சி : ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்த தவெக தொண்டர்கள்!

Published On:

| By Kavi

திருச்சியில் கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்துக்கு நடுவே ஆம்புலன்ஸ் சென்ற நிலையில், அதற்கு தவெக தொண்டர்கள் வழி ஏற்படுத்தி கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது முதல் பிரச்சாரத்தை திருச்சியில் இன்று (செப்டம்பர் 13) தொடங்குகிறார். 

ADVERTISEMENT

இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விஜய், தற்போது பிரச்சார வாகனத்தில் தொண்டர்களின் கூட்டத்துக்கு நடுவே சென்று கொண்டிருக்கிறார். 

விஜயின் பிரச்சார வாகனத்துக்கு பின்னால் ஐந்து வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது என்று காவல்துறை கட்டுப்பாடு விதித்திருந்த போதிலும், தற்போது ஆயிரக்கணக்கான வாகனங்கள் பிரச்சார வாகனத்திற்கு பின்னே சென்று கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT

திருச்சி மட்டுமின்றி திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், புதுக்கோட்டை என பிற மாவட்டங்களில் இருந்து ரசிகர்களும் தொண்டர்களும் குவிந்துள்ளனர். 

இதனால் திருச்சியில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது. மரக்கடை பகுதியை சுற்றி இரண்டரை கிலோ மீட்டர் சுற்றளவுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு தொண்டர்கள் நடந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

இந்த சூழலில், திருச்சி விமான நிலைய கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கியது. இதையடுத்து இருபுறமும் விலகி நின்று அந்த ஆம்புலன்ஸ் செல்ல தவெக தொண்டர்கள் வழிவிட்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

முன்னதாக அதிமுக பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தபோது அதனால் கடுப்பான அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  இனி பிரச்சாரக் கூட்டத்துக்குள் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த வண்டியில் அதன் டிரைவரே செல்ல வேண்டிய நிலை வரும் என்று எச்சரித்து இருந்தார். 

இதையடுத்து அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே ஆம்புலன்சை வைத்து கடுமையான விமர்சனங்கள் நடந்து வருகின்றன. 

எடப்பாடி பழனிசாமி திமுக வென்டிலேட்டரில் இருப்பதாக விமர்சிப்பதும் அதற்கு துணை முதல்வர் உதயநிதி அதிமுக ஐசியுவில் அனுமதிக்கப்படும் என்று தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பதில் அளிப்பதும் தொடர்ந்து வருகிறது. 

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் ஆம்புலன்ஸுக்கு வழி விட்ட வீடியோ பாராட்டைப் பெற்று வருகிறது. 

முன்னதாக பிரச்சார கூட்டத்தின் போது ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share