தர்மபுரியில் போராட்டத்தில் ஈடுபட்ட போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலரின் கையை கடித்த தவெக தொண்டர் ஜெமினி உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகில் கடந்த வாரம் புதிதாக சொகுசு மதுபான கூடம் ஒன்று திறக்கப்பட்டது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பாதிப்புக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் மதுபான கடையை அகற்றக்கோரி தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக நேற்று (டிசம்பர் 7) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது நுழைவாயிலில் கயிறு கட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தவெக கட்சியினர் காவல் துறையினரை மீறி, உள்ளே நுழைந்து திடீரென மதுபானக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்றனர்.
காவல்துறையினர் தகரத்தின் மீது ஏறிய தவெக தொண்டரை கீழே இறக்கினர். அப்பொழுது திடீரென தவெக தொண்டர் ஜெமினி காவலரின் கையை கடித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஜெமினியை பாலக்கோடு காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்ததில் தொடர்புடைய 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவலரை கடித்த ஜெமினி உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயபிரகாஷ், கணேசன், கிருஷ்ணன், வினோத்குமார் என ஐந்து பேரை பாலக்கோடு காவல்துறையினர் கைது செய்தனர்.
