ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் டிசம்பர் 16-ந் தேதிக்கு பதில் டிசம்பர் 18-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து விஜய்யின் ரோடு ஷோ நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. அண்மையில் காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரி அரங்கில் பொதுமக்களை சந்தித்து பேசினார் விஜய். இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் 5,000 பேர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விஜய் பேசினார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மீண்டும் ஈரோட்டில் இருந்து விஜய் தொடங்க இருக்கிறார். ஈரோட்டில் விஜய் டிசம்பர் 16-ந் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தார். இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டன.
தற்போது பெருந்துறை சரளை பகுதியில் டிசம்பர் 18-ந் தேதி விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதித்துள்ளனர். விஜய் கூட்டத்துக்கு 84 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கே.ஏ.செங்கோட்டையன், “ விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்கக் கூடியவர்கள் யாரும் கூட்டணிக்கு வரலாம். பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை பகுதியில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி டிசம்பர் 18-ந் தேதி முற்பகல் 11 மணி முதல் பகல் 1 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்த பிரசார கூட்டம் நடைபெறும் இடம் கோவிலுக்கு சொந்தமானது என கூறப்பட்டது. ஆனால் இந்த நிலம் அறங்காவலர் குழுவுக்குதான் சொந்தமானது; இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
ஈரோட்டில் மக்கள் பிரசார இயக்கத்தில் விஜய் பங்கேற்கும் போது அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் தவெகவில் இணைய வாய்ப்புள்ளது என்றார்.
