சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு அங்கிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று (செப்டம்பர் 13) முதல் திருச்சியில் இருந்து தனது அரசியல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
இதற்காக காலை 8.30 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்டார் விஜய். அவருடன் விஜய் மேலாளர் ஜெகதீஷ், தனி பாதுகாவலர் ஆகியோர் உடன் சென்றனர்.
காலை 9.45 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு இன்று காலை முதலே காத்திருந்த தொண்டர்கள் உற்சாக கோஷம் எழுப்பி வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து விஜய் தனது பிரச்சாரத்திற்காக தயாராகியிருந்த பிரத்யேக பேருந்தில் விஜய் ஏறிய நிலையில், அங்கிருந்த தடுப்புகளையும் தாண்டி பேருந்தின் பக்கத்தில் தொண்டர்கள் சென்று மலர் தூவி அவரை வரவேற்று வருகின்றனர்.
மேலும் விஜய்யின் வாகனத்தை சூழ்ந்தபடி தொண்டர்கள் வழிநெடுக வரும் நிலையில், அந்த வாகனம் மெதுவாகவே இயக்கப்பட்டு வருகிறது. மேலும் தொண்டர்கள் குவிந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், விமான நிலையத்தில் 5 கி.மீ தூரத்தில் உள்ள மரக்கடை பகுதிக்கு செல்ல தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
