பிரச்சார பயணத்தை இன்று தொடங்குகிறார் விஜய்… 4 இடங்களில் மக்களை சந்திக்கிறார்!

Published On:

| By christopher

tvk vijay start his election campaign from today

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சியில் இன்று (செப்டம்பர் 13) பிரச்சார சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, தேமுதிக சார்பில் பிரச்சார சுற்றுப் பயணங்கள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டன. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று முதல் தனது மாநிலம் தழுவிய பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

ADVERTISEMENT

அதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை புறப்படும் விஜய் 9 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். அதனைத் தொடர்ந்து அண்ணா, எம்ஜிஆருக்கு நடுவில் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ள பேருந்தில் இருந்தபடி முதலில் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் காலை 10.35 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கி பேசுகிறார்.

அதன்பின், அரியலூர் சென்று பழைய பேருந்து நிலையம் அருகே பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை பிரச்சாரம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து பெரம்பலூர் மாவட்டம் செல்லும் விஜய், குன்னம் பேருந்து நிலையம் அருகே மாலை 4 மணியளவிலும், பெரம்பலூர் வானொலித் திடலில் மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன்பின் சாலை மார்க்கமாக சென்னை திரும்புவார் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக விஜய் தனது தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில், ”மக்களின் மனமறிந்து அரசியல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம், மக்களுக்காக ‘மனசாட்சி உள்ள மக்களாட்சி’யை அமைக்கும் உன்னத லட்சிய நோக்குடன் களமாடி வருகிறது. மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நா வரேன்” என்கிற நமது பயணம்தான் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம்.

இன்று (13.09.2025) காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே தொடங்கி அடுத்தடுத்து, நமது மதுரை மாநாட்டில் சொன்னதுபோலவே, என் குடும்ப உறவுகளாகிய உங்களைச் சந்திக்க, உங்களுக்காகவே குரல் கொடுக்க உங்கள் விஜய், நம் கொள்கைத் தலைவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில், “மக்களிடம் செல்” என்ற பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் ஆணையை மானசீகமாக ஏற்று, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வருகிறேன்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

விஜய்யின் இந்த பிரச்சார பயணத்திற்கு காவல்துறை தரப்பில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனையும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார் விஜய்.

அவர், “ஓர் அரசியல் கட்சியின் தலைவராக, நாம் ஜனநாயக முறையில் மக்களைச் சந்திக்க விழைகிறோம். இந்நிலையில், தமிழ்நாட்டு அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில், எந்த அரசியல் தலைவருக்கும் செய்யாத வகையில், மக்கள் சந்திப்பு சார்ந்த பாதுகாப்பு நிபந்தனைகளை நம் கழகத்தின மீது மட்டும் காவல்துறை விதித்துள்ளது. இப்படி பாதுகாப்பு சார்ந்த தமது பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல், அரசியல் நிலைப்பாடுகளைக் கடந்து தார்மீகக் கடமையோடு நமது கழகத் தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதை இந்த அரசும் காவல்துறையை வழிநடத்தும் தமிழ்நாட்டு முதலமைச்சரும் உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share