தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழாவின் முதல் நிகழ்வாக மும்மொழி கொள்கைக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை விஜய் தொடங்கி வைத்தார். tvk vijay sign protest against NEP
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்ரவரி 26) கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் காலை 7.30 மணி முதல் அங்கு குவிந்தனர். இதனால் மகாபலிபுரம் ஈசிஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் சரியாக 10 மணியளவில் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் மேடையேறினார் கட்சியின் தலைவர் விஜய். அப்போது அங்கிருந்த நிர்வாகிகளின் கோஷத்தால் அரங்கமே அதிர்ந்தது.
விஜய் மற்றும் பிரசாந்த் கிஷோரை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தொடர்ந்து மேடையில் இருந்து கீழிறங்கிய விஜய், ‘புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டத் திணிப்போடு சேர்த்தும் பின்வரும் முக்கிய அவலங்களையும் எதிர்த்துப் போராடி இவைகளை #GetOut செய்திட உறுதியேற்போம்’ என்று பேனரில் தனது கையெழுத்தை முதல் ஆளாக பதிவு செய்தார். இதன்மூலம் கட்சியின் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் விஜய்.

அவரைத்தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் கையெழுத்திட்டனர். ஆனால் தவெக கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் இந்த ‘get out’ பேனரில் கையெழுத்திட மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.