பெரியாருக்கு மரியாதை ஏன் தெரியுமா? – நிதியமைச்சருக்கு பட்டியலிட்டு விஜய் பதிலடி!

Published On:

| By christopher

tvk vijay reply to nirmala sitharaman on periyar

பெரியாரை நாடாளுமன்றத்தில் விமர்சித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தவெக தலைவர் விஜய் இன்று (மார்ச் 12) பதிலடி கொடுத்துள்ளார். tvk vijay reply to nirmala sitharaman on periyar

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழ்நாட்டு எம்பிக்கள் குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய கருத்துகளை வாபஸ் பெற வைத்துவிட்டீர்கள். ஆனால் தமிழைத் தொடர்ந்து காட்டுமிராண்டி மொழி என விமர்சித்த பெரியார் படத்துக்கு மாலை போட்டு மரியாதை செலுத்துகிறீர்களே.. உங்களின் போலித்தனத்தை நீங்களே பாருங்கள்” என தமிழக எம்.பிக்களை நோக்கி விமர்சித்தார்.

இந்த நிலையில் ’பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?’ என நிர்மலாவின் பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது?

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே ஒன்றிய அரசின் நிதி அமைச்சருக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே?

முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!?

குழந்தைத் திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால், சாதிக் கொடுமைகளை எதிர்த்ததால் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால், இன்றைய நிலையுடன் பொருத்திப் பார்த்துச் சொன்னால், இன்று எல்லோரும் கேட்கும் சமூக நீதிக்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நூறாண்டுகளுக்கு முன்பே கேட்டவர் என இன்னும் அவரைப் போற்றுவதற்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

ஒன்றிய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு வலுவானவராக இன்றும் பெரியார் இருக்கிறாரே… இது போதாதா அவரைத் தமிழ்நாடு ஏன் இன்றும் மாலை மரியாதை செய்து போற்றுகிறது என்பதற்கு?” என விஜய் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share