சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு இன்று (செப்டம்பர் 13) காலை புறப்பட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.
வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று முதல் திருச்சியில் இருந்து தனது அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்திக்கிறார். அதோடு அரியலூர், குன்னம், பெரம்பலூரில் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதற்காக காலை 8.30 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்டார் விஜய். அவருடன் விஜய் மேலாளர் ஜெகதீஷ், தனி பாதுகாவலர் ஆகியோர் உடன் செல்கின்றனர்.
இதற்கிடையே திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கும் விஜய்யை வரவேற்பதற்காக தவெக தொண்டர்கள் பெருமளவில் காலை முதலே குவிந்து வருகின்றனர். தவெக நிர்வாகிகள் மேளதாளம் முழங்க, விஜய்யை வரவேற்க திரண்டுள்ளனர். விமான நிலையத்தில், ஏராளமான பெண்கள் பால் குடங்களுடன் விஜய்யை வரவேற்க காத்திருக்கின்றனர்.
அதே போன்று காலை முதலே திருச்சியில் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ள மரக்கடை பகுதியிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
