புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி தவெகவினர் இன்று (டிசம்பர் 4) மனு அளித்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நோக்கில் தமிழக வெற்றிக்கழகம் பணியாற்றி வருகிறது. தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தினார்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது நடிகரும் அக்கட்சியின் தலைவருமான விஜய் பேசிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
இதையடுத்து தவெக சார்பில் திட்டமிடப்பட்டிருந்த விஜயின் பிரச்சாரக் கூட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. கரூர் சம்பவம் நடந்து 2 மாதங்கள் முடிவடைந்த நிலையில் புதுச்சேரியில் நாளை டிசம்பர் 5 விஜய் ரோடு ஷோ நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு அக்கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் விஜயின் ரோடு ஷோக்கு அனுமதி வழங்க புதுச்சேரி காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் புதுச்சேரி முதல்வரை நேரில் சந்தித்து ரோடுஷோக்கு அனுமதி கேட்ட போதும் காவல்துறை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது. வேண்டுமானால் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம். அதற்கான நேரத்தை தவெகவினரே முடிவு செய்யட்டும் என டிஜிபி தெரிவித்தார்.
இந்நிலையில் வரும் 9 ஆம் தேதி புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் தவெக பொது கூட்டம் நடத்த அனுமதி கேட்டு அக்கட்சியினர் இன்று சட்டம் ஒழுங்கு முதுநிலை கண்காணிப்பாளர் கலைவாணனிடம் கடிதம் அளித்துள்ளனர்.
