புதிதாக நியமிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக தவெக மாவட்டச் செயலாளரை மாற்றக்கோரி அக்கட்சியினர், இன்று (மார்ச் 13) நடுரோட்டில் விஜய்யின் காரை நிறுத்தி மனு அளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. tvk partymen stop the vijay car in road
அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலை, மற்ற முன்னணி கட்சிகளுக்கு இணையாக எதிர்கொள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் தீவிரம் காட்டி வருகிறது.
அதன்படி ஏற்கெனவே தவெகவில் 5 கட்டங்களாக 95 மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து விஜய் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் 6வது கட்டமாக புதிதாக அறிவிக்கப்பட உள்ள மேலும் 19 மாவட்டச் செயலாளர்களை சந்தித்து பேச இன்று மதியம் தனது இல்லத்தில் இருந்து பனையூர் கட்சி அலுவலகத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றார் விஜய்.
அவர் காரில் புறப்படுவதற்கு முன்னதாக, அவரது வீட்டின் முன்பு திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த தவெக தொண்டர்கள் குவிந்தனர்.
அவர்கள், விஜய்யின் கார் புறப்படுவதற்கு முன்பாக “திருவள்ளூர் தென்கிழக்கு மாவட்ட செயலாளராக, ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த ஆர்.கே. மணிகண்டனை நியமிக்கக் கூடாது” என குறிப்பிட்டு மனு அளிக்க முயன்றனர். அப்போது மனுவை விஜய் பெற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இதனால் விஜய்யின் கார் புறப்பட்டு சாலையில் வந்துகொண்டிருந்தபோது, அதனை பைக்கில் சென்று நடுவழியில் நிறுத்தியும் தொண்டர்கள் மனு அளிக்க முயன்றனர். ஆனால் அப்போதும் விஜய் அதனை பெற்றுக்கொள்ளாமல் சென்றார்.
புதிய மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக நடந்துள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும் புதிய நிர்வாகிகளுடன் சந்திப்புக்கு பின்னர் திருவள்ளூர் தென்கிழக்கு மாவட்ட செயலாளராக ஆர்.கே. மணிகண்டனையே நியமித்து விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.