தவெக பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதிய நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பனையூரில் நாளை (அக்டோபர் 28) நிர்வாக குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் கடந்த ஒரு மாதமாக முற்றிலும் முடங்கின. இதனால் தவெக தொண்டர்கள் மட்டுமின்றி தவெக நிர்வாகிகளும் சரியான வழிகாட்டுதல்கள் இன்றி குழம்பி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை மாமல்லபுரம் வரவழைத்து சந்தித்த தவெக தலைவர் விஜய், அவர்களுக்கு ஆறுதல் அளித்ததோடு, அனைத்துவிதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் வாக்குறுதி அளித்தார்.
இதனையடுத்து தனது கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார் விஜய். அதன்படி கட்சியின் அன்றாட செயல்பாடுகள், பணிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்க 28 பேர் அடங்கிய புதிய நிர்வாகிகள் குழுவை இன்று நியமித்து உத்தரவிட்டார்.
பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா முதல் கழக உறுப்பினர் மரிய வில்சன் என 28 பேர் அதில் இடம்பெற்றுள்ளனர். தமது வழிகாட்டுதல் படி இயங்கும் இந்த புதிய குழுவுக்கு கட்சியினர் அனைவரும் ஒத்துழைய்பு வழங்க வேண்டும் என்றும் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக கட்சியின் பொதுச்செயலாளரான ஆனந்த் முக்கிய அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், நாளை காலை 10.00 மணிக்கு, பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது. கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.
