21 கேள்விகள்! ட்விஸ்ட் வைத்த போலீஸ் – தள்ளாடும் தவெக மாநாடு… குழப்பத்தில் விஜய்?

Published On:

| By Minnambalam Login1

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற செப்டம்பர் 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், மாநாட்டுக்காகச் செய்யப்பட இருக்கும் ஏற்பாடுகள் குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்திடம் கொடுத்துள்ளனர்.

நடிகர் விஜய் தான் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி மற்றும் கட்சி பாடலை கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி அறிமுகம் செய்துவைத்தார். மேலும், கட்சியின் மாநில அளவிலான மாநாட்டிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செப்டம்பர் 23-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சியின் மாநில மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி கோரி விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமாலை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

கடிதத்தைப் பெற்றுக்கொண்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் திருமால், இந்த விஷயத்தை விழுப்புரம் எஸ்பி, டிஐஜி கவனத்திற்குக் கொண்டு சென்றார்.

இதனையடுத்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், மாநாடு நடக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று ஆராய்ந்துவிட்டு அறிக்கை தாருங்கள் என்று விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து மாநாட்டுக்கு அனுமதி கேட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்துவிட்டு அஸ்ரா கார்கிடம் அவர் கேட்ட ரிப்போர்ட்டை விழுப்புரம் மாவட்ட காவல்துறை கொடுத்துள்ளது.

அந்த அறிக்கையில், “பாராளுமன்றத் தேர்தலின் போது முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர் அறிமுகம் கூட்டத்திற்கு வந்தபோது 40 ஆயிரம் பேர் கூடினார்கள் அப்போதே சாலைகள் முழுவதும் ஸ்தம்பித்துப் போனது. ரூட் மாற்றிவிட மாற்றுப் பாதையும் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த ரிப்போர்ட்டை படித்துப் பார்த்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், பொதுமக்கள் நலன் கருதிக் காவல் துறை அனுமதி கொடுக்கவில்லை என்றால் தவெக கட்சியினர் உயர்நீதிமன்றம் செல்வார்கள். அதனால் என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்தினார்கள்.

இந்தநிலையில், புஸ்ஸி ஆனந்திடம் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸை விழுப்புரம் போலீசார் இன்று வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது,

“மாநாட்டுக்கு அனுமதி கேட்டு புஸ்ஸி ஆனந்த் மனு அளித்திருந்த நிலையில், விழுப்புரம் உட்கோட்டம் டி.எஸ்.பி சுரேஷ், விக்கிரவாண்டி காவல் நிலையம் சார்பில் புஸ்ஸி ஆனந்திடம் நோட்டீஸை ஒப்படைக்க சொல்லியிருக்கிறார்.

இதனையடுத்து விக்கிரவாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் காத்தமுத்து புஸ்ஸி ஆனந்தை தொடர்புகொண்டு ‘மாநாடு சம்பந்தமாக டிஎஸ்பி உங்களிடம் நோட்டீஸ் கொடுக்க சொல்லியிருக்கிறார். எப்போது பெற்றுக்கொள்கிறீர்கள்?’ என்று கேட்டுள்ளார்.

‘பாண்டிச்சேரி மலையனூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துகொண்டிருக்கிறேன். திண்டிவனத்தில் காத்திருங்கள். அங்கு வந்து நோட்டீஸை பெற்றுக்கொள்கிறேன்’ என்றிருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்.

பின்னர், திண்டிவனத்தில் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து டிஎஸ்பி அளித்த  21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸை காத்தமுத்து ஒப்படைத்தார். அந்த நோட்டீஸில் 21 கேள்விகள் இடம்பெற்றுள்ளது.

அதாவது… மாநாடு நடத்த யாரிடம் இடம் வாங்கியிருக்கிறீர்கள்? மாநாடு நடைபெறும் இடத்தின் உரிமையாளர்கள் பெயர், அவர்களது விவரம்? அக்ரிமெண்ட் நகல்? மாநாட்டுக்கு ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என எத்தனை பேர் வருவார்கள்? விஐபிகள் யார் யார் வருகிறார்கள்? அவர்கள் வருவதற்கான தனி வழி ஏதேனும் ஏற்பாடு செய்யப்போகிறீர்களா?

கார் பார்க்கிங் செய்ய என்ன மாதிரியான வசதிகள் செய்யப்படும்? மாநாட்டுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய என்ன திட்டமிட்டுள்ளீர்கள்? உணவு கொடுக்க திட்டம் இருக்கிறதா? உணவு கொடுக்கும் பட்சத்தில், சாப்பாடு பஃபே சிஸ்டத்தில் பரிமாறப்போகிறீர்களா அல்லது பாக்கெட்டில் வழங்கப்போகிறீர்களா?

மாநாட்டில் சேகரமாகும் குப்பைகளை அகற்றுவது யார்? அதற்கான திட்டம் என்ன? பாத்ரூம் வசதி, அவசர சிகிச்சை வசதி இவையெல்லாம் ஏற்பாடு செய்யப்படுமா? என 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸை கொடுத்து பதில் கேட்டுள்ளது விழுப்புரம் மாவட்ட காவல்துறை. இந்த 21 கேள்விகளுக்கும் பதில் கொடுத்த பிறகு அனுமதி வழங்கலாமா இல்லையா என்று காவல்துறை முடிவு செய்ய இருக்கிறது” என்கிறார்கள்.

தவெக தலைமை நிர்வாகிகளிடம் விசாரித்தபோது,

“செப்டம்பர் 5 ஆம் தேதி வெளிவரவிருக்கும் GOAT படத்தை வெற்றிகரமாக கொண்டாட திட்டமிட்டு வருகிறோம். இன்னொரு பக்கம் மாநாட்டுக்குச் செல்வதற்காக வேன், கார் மற்றும் பேருந்துகளை புக்கிங் செய்தும் வருகிறோம்.

மாநாட்டு பணிகளை கவனித்துக்கொள்ள சினிமாவில் செட் அமைப்பவர்களிடம் விஜய் ஒப்படைத்துள்ளார். அவர்களிடம் பந்தல் மற்றும் மேடை அமைக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என்று விஜய் கேட்டுள்ளார்.

‘காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி காலதாமதமாக கொடுத்தால் மாநாடு பணியை முழுமையாகச் செய்து முடிக்க முடியாது. 15 – 20 நாட்கள் போதாது. கூடுதல் நாட்கள் தேவைப்படும்’ என்று பதிலளித்துள்ளனர்.

மாநாட்டு அனுமதிக்கான போலீஸ் கொடுத்த நோட்டீஸுக்கு வழக்கறிஞர்கள், சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை செய்து பதில் கொடுக்கவே 4 – 5 நாட்கள் ஆகும். அதன்பிறகு மாநாட்டுக்கு அனுமதி கொடுக்கலாமா வேண்டாமா என முடிவு செய்வதற்கு குறைந்தது ஐந்து நாட்கள் எடுத்துக்கொள்வார்கள்.

செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு மேல் அனுமதி கொடுத்தால் பந்தல், மேடை, விஐபி பார்க்கிங் இவையெல்லாம் முறையாக செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி தான்.

இதனால், தவெக தலைமை மாநாட்டை தள்ளி வைக்கவும் மாற்று இடத்தை பார்க்க ஆலோசனை செய்தாலும் முதன்முதலாக மாநாடு தேதி அறிவித்துவிட்டு ரத்து செய்வது என்பது நடிகர் விஜய்யை டென்ஷன் ஆக்கியுள்ளது” என்கிறார்கள் தவெக நிர்வாகிகள்.

-வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பழனியில் நடைபெற்றது இந்து விரோத மாநாடு… ஹெச்.ராஜா காட்டம்!

கேரளா சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் புகார் அளிக்காதது ஏன்? ராதிகா விளக்கம்!

அந்த மோசமான ஆம்பள நரி : ஸ்ரீரெட்டி யாரை சொல்கிறார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share