விஜயதசமிக்கு வாழ்த்து : பாஜகவினருக்கு விஜய் பதில்?

Published On:

| By christopher

TVK leader Vijay wishes for Ayuda Puja, Saraswati Puja!

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியையொட்டி தவெக தலைவர் விஜய் இன்று (அக்டோபர் 11) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் களத்தில் குதித்தார் நடிகர் விஜய்.

அப்போதே 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என அறிவித்த விஜய், கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து பாடலையும் வெளியிட்டார். தொடர்ந்து வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள கட்சியின் முதல் மாநாட்டு பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையே பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து, அரசியல் தலைவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து, மத விழாக்களுக்கு வாழ்த்து என வாழ்த்துகளை மட்டும் தவெக எக்ஸ் தள பக்கத்தில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த மாதம் நாடு முழுவதும் கொண்டாட்டப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்காததும், அதன் பின்னர் ஓணத்திற்கு வாழ்த்து தெரிவித்ததும் சர்ச்சையானது.

பக்ரித், ஈஸ்டர், புனித வெள்ளிக்கு வாழ்த்து சொல்லும் விஜய் ஏன் விநாயகர் சதுர்த்திக்கு  வாழ்த்து  தெரிவிக்கவில்லை என்றும், திமுகவை காப்பியடிக்கிறார் என்றும், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நபர் அடுத்த முதல்வராக வரக்கூடாது என்றும் பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

எனினும் விஜய்க்கு ஆதரவாக பதிலளித்து வந்த அவரது கட்சியினர், இதற்கெல்லாம் விக்கிரவாண்டியில் நடைபெறும் கட்சியின் முதல் மாநாட்டில் விஜய் பதிலளிப்பார் என கூறி வந்தனர்.

இந்த நிலையில், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜைக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும். பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை. சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திருநாள்களில், நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள்” என விஜய் குறிப்பிட்டுள்ளார்.

TVK leader Vijay wishes for Ayuda Puja, Saraswati Puja!

இதன்மூலம் பாஜவினர் எழுப்பிய சர்ச்சைக்கு விஜயதசமி வாழ்த்து மூலம் விஜய் பதிலளித்துள்ளதாக கட்சியினர் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா 

பெசன்ட் நகரில் முரசொலி செல்வம் உடல் இன்று தகனம்!

சிதம்பரம் கோயில் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? : மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share