தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு- கைது செய்ய உத்தரவு?

Published On:

| By Mathi

TVK Adhav

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவை கைது செய்ய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தவெக தலைவர் நடிகர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் பிரசார கூட்டத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இது தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், மாவட்ட நிர்வாகி பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

ADVERTISEMENT

இதனிடையே தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா நேற்று நள்ளிரவு தமது எக்ஸ் பக்கத்தில், இலங்கை மற்றும் நேபாளத்தைப் போல Gen Z புரட்சி நடக்க வேண்டும‘ என பதிவிட்டு அதை நீக்கி இருந்தார்.

ஆனால் ஆதவ் அர்ஜூனாவின் இந்த பதிவு ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும் ஆதவ் அர்ஜூனா மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ADVERTISEMENT

இதனையடுத்து ஆதவ் அர்ஜூனா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார், 192, 196(1)(b), 197(1)(d), 353(1)(b) , 353(2) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப் பதிவு (Cr. No .47/2025) செய்துள்ளனர்.

இதனடிப்படையில் ஆதவ் அர்ஜூனாவை கைது செய்ய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share