தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்து விஜய் கைப்பட எழுதிய கடித நகலை அனுமதியின்றி விநியோகித்ததாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று (டிசம்பர் 30) கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
எனினும் தமிழகத்தில் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாதுகாப்பில்லாத நிலை தொடர்வதாக எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பில் உள்ள குறைபாடு, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் தனது கைப்பட கடிதம் ஒன்றை இன்று எழுதியிருந்தார்.

அதில், ஒவ்வொரு நாளும் அனைத்து தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன் என்றும், எல்லா சூழல்களிலும் அண்ணணாகவும், அரணாகவும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் எனவும் விஜய் அந்த கடித்தத்தில் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் தாக்குதல் சம்பவத்தை குறிப்பிட்டு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை கடுமையாக மோசமடைந்து வருவதாக கூறி இவை தொடர்பாக தலையிட கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் இன்று சந்தித்து மனு அளித்தார்.

இதற்கிடையே விஜய் கைப்பட எழுதிய கடிதத்தை பிரிண்ட் எடுத்து தவெகவினர் மாநிலம் முழுவதும் வழங்கி வந்தனர்.
அதன்படி தி.நகரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் விஜய்யின் கடித நகலை பொதுமக்களுக்கு கட்சியினர் வழங்கினர்.
இதனையறிந்து அங்கு குவிந்த போலீசார், அனுமதியின்றி கடித நகலை வழங்க கூடாது என்றும், கலைந்து செல்லும்படியும் கூறினர். ஆனால் தொடர்ந்து கட்சியினர் அதனை வழங்கிய நிலையில் புஸ்சி ஆனந்த் உட்பட 30க்கும் மேற்பட்ட கட்சியினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டதை கண்டித்து தவெகவினர், திமுக அரசுக்கு எதிராகவும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா
ஆஸ்திரேலியாவுடன் படுதோல்வி… இன்னும் WTC பைனல் ரேஸில் உள்ளதா இந்தியா?
பாடப்புத்தகத்தில் நல்லகண்ணு : விஜய் சேதுபதி கோரிக்கை… அன்பில் மகேஸ் ரியாக்சன்!