தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (மார்ச் 28) நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு, அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்.
தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக்கூடாது. வேறு ஒரு இடத்தை தேர்வு செய்து விமான நிலையம் அமைக்க வேண்டும்.
மும்மொழிக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். தமிழ்நாட்டிற்கு எப்போதும் இருமொழிக் கொள்கை தான் என்பதை இப்பொதுக்குழு திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறது.
மாநிலங்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது. இப்போது இருக்கும் தொகுதிகளான 543 என்ற எண்ணிக்கையே காலவரையின்றி தொடர வேண்டும் என்பதே தவெகவின் நிலைப்பாடாகும். எனவே தொகுதி மறுசீரமைப்பு முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
ஜி.எஸ்.டி. மூலம் நிதி அதிகாரத்தையும், நீட் மூலம் கல்வி அதிகாரத்தையும், மும்மொழித் திணிப்பின் மூலம் மொழி அதிகாரத்தையும், தொகுதி மறுசீரமைப்பு என்ற முறையில் மாநில அரசுகளிடையே பிளவினை ஏற்படுத்த முயல்வதையும், வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண் கொள்கைகளை மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசு பறிப்பதையும் இப்பொதுக் குழு கண்டிக்கிறது. அதிகாரம் ஒன்றிய அரசிடம் குவியாமல், மாநில அரசுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
பெண்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். அதில் முன்னாள் பெண் நீதிபதிகள் மற்றும் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகள் இடம்பெற வேண்டும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருடக்கணக்காகப் போராடி வருகின்றது. லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட இப்போராட்டத்தை இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு கண்டுகொள்ளாமல், மறைமுகமாகப் பழிவாங்குவது போல் நடந்துகொள்கிறது.
இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலையே ஆகும். தமிழக அரசு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று போலி வாக்குறுதி அளித்து, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அக்கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டு, மீண்டும் அவர்களைப் போராட்டக் களத்தில் தள்ளியதற்காகத் முதலமைச்சர் ஸ்டாலின் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம், தன் மனப்பூர்வமான ஆதரவை வழங்குகிறது.
போதைப் பொருள் புழக்கம், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே தாராளமாகிவிட்டது. வேறு எப்போதும் இல்லாத வகையில் இத்தகைய கொடும் சூழல் மேலும் மேலும் பெருகி வருதலுக்குக் காரணம், சட்டம் ஒழுங்கு சீர்கேடே அன்றி வேறில்லை.

இந்தச் சீர்கேட்டிற்கு ஒரே காரணம், தற்போதைய ஆளும் திமுக அரசு மட்டுமே. ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் சட்டம் ஒழுங்கைச் சீர்ப்படுத்த இயலாத திமுக அரசு, தன் பொறுப்பற்ற தன்மையை ஒப்புக்கொண்டு, மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். மேலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
சமூக நீதியை நிலைநிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களின் பேராதரவையும், பேரன்பையும் பெற்றுள்ள நம் தலைவர் விஜய், தன்னுடைய மக்கள் சந்திப்பு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், சுற்றுப்பயணங்கள் மற்றும் தேர்தல் சார்ந்த முடிவுகள் எடுக்கும், பரிபூரண அதிகாரத்தையும் உரிமையையும் நம் தலைவர் அவர்களுக்கு அளிப்பது என இப்பொதுக்குழு முழு மனதுடன் முடிவெடுக்கிறது. TVK General Council meeting