வருங்கால முதல்வர் புஸ்ஸி ஆனந்த்… தவெக பொதுக்குழுவில் போஸ்டர் சர்ச்சை!

Published On:

| By Selvam

“வேண்டுமென்றே சில விஷமிகள் வருங்கால முதல்வர் புஸ்ஸி ஆனந்த் என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர்” என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று (மார்ச் 28) விளக்கமளித்துள்ளார். Tvk meeting poster controversy

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற உள்ளது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காலை முதலே நிர்வாகிகள் குவிந்தனர். தவெக தலைவர் விஜய்யை வரவேற்கும் விதமாக வழி நெடுகிலும் டிஜிட்டல் பேனர்கள், தவெக கொடி மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. விஜய் வருகை தந்தபோது அவரை மேள, தாளத்துடன் உற்சாகமாக வரவேற்றனர். நிர்வாகிகள் அனைவரும் கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, இருமொழிக்கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக பொதுக்குழு கூட்டத்தை ஒட்டி சென்னையின் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் ஈசிஆர் சரவணன் பெயரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை வருங்கால முதலமைச்சர் என்று குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ள புஸ்ஸி ஆனந்த், “2026-ஆம் ஆண்டு தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நான் கட்சியில் ஒரு சாதாரண தொண்டன். வேண்டுமென்றே சில விஷமிகள் இதுபோன்ற போஸ்டர் ஒட்டியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

ஈ.சி.ஆர்.சரவணன் கூறும்போது, “இந்த போஸ்டர் மறைமலைநகரில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டருக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. முதல்வர் என்றால் அது எங்கள் தலைவர் விஜய் தான். என் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியில் மாற்றுக் கட்சியினர் யாராவது இந்த போஸ்டரை ஒட்டியிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். Tvk meeting poster controversy

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share