தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை முதன்முறையாக அறிமுகம் செய்து சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று கொடியேற்றினார் அக்கட்சியின் தலைவர் விஜய். இதில் அவரது பெற்றோர் மற்றும் 300க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அடர்சிவப்பு, மஞ்சள் நிறம் கொண்ட கொடியில் சாம்பல் நிற இரட்டை யானைகள், வாகை மலர், பச்சை மற்றும் நீல நட்சத்திரங்கள் இருந்தது அவரது தொண்டர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளையில் விஜய் அறிமுகப்படுத்திய கொடி குறித்து சமூகவலைதளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது தவெக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆர்.கே.நகரைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் செல்வம் என்பவர் ஆன்லைனில் அளித்துள்ள புகாரில், “நடிகர் விஜய் நேற்று அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் சட்டத்திற்கு புறம்பாக கேரள அரசு போக்குவரத்து சின்னமான யானை இடம்பெற்றுள்ளது.
ஸ்பெயினை அவமதிக்கும் வகையில் அந்நாட்டு தேசிய கொடி போன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களின் சின்னமாக விளங்கும் வாகைப் பூவின் சின்னத்தையும் தவறாக பயன்படுத்தி உள்ளார் விஜய்.
தேர்தல் ஆணைய விதிப்படி உயிருள்ள ஜீவன்களை கட்சிக் கொடியில் பயன்படுத்தக் கூடாது.
ஆனால் அதற்கெல்லாம் மாறாக தவெக கொடியில் யானை சின்னம் உள்ளதால் நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என செல்வம் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ”தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் யானை. ஆகையால் விஜய் கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம் பெறக் கூடாது, அதனை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்படும் என கூறி தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பி. ஆனந்தன் நேற்று பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Diamond League 2024: லோசானில் நீரஜ் சோப்ரா 2வது இடம்… இறுதிப்போட்டிக்கு செல்வாரா?
கிருஷ்ணகிரி பாலியல் சம்பவம் : உயிரிழந்த சிவராமனின் தந்தையும் மரணம்!