விஜய்யை சந்தித்தே தீருவேன் என தவெக பெண் நிர்வாகி அஜிதா கட்சி அலுவலக முன்வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பின் வாசல் வழியே அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட தவெக பெண் நிர்வாகி அஜிதா, தனக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கவில்லை என கூறி இன்று காலை பனையூரில் உள்ள விஜய்யின் கட்சி அலுவலகத்துக்கு வந்தார்.
அலுவலகத்துக்கு விஜய் காரில் வந்த போது அந்த காரை அஜிதாவும், அவரது ஆதரவாளர்களும் மறித்தனர். இந்தநிலையில் விஜய் தன்னிடம் நேரடியாக வந்து பேச வேண்டும் என்று கட்சியின் முன்வாசல் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
விஜய் தன்னிடம் வந்து பேசினால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வேன் என பிடிவாதமாக அமர்ந்துள்ளார்.
அவருடன் அமர்ந்திருக்கும் அவரது ஆதரவாளர்கள், அஜிதா தனது தொகுதி மக்களுக்கு என்னென்ன செய்திருக்கிறார் என ஸ்பைரல் பைண்டிங் போட்டு எடுத்து வந்து ஊடகங்களிடம் காட்டி வருகின்றனர்.
சிலர் அஜிதாவை தவிர வேறு யாரும் அவரது தொகுதியில் வெற்றி பெற முடியாது என்றும் காசு வாங்கிக் கொண்டு பொறுப்புகளை கொடுத்திருக்கிறார்கள் என்றும் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இப்படி கட்சி அலுவலக முன்வாசல் பரபரப்பாக இருக்கும் நிலையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பின் வாசல் வழியாக வெளியேறி காரில் புறப்பட்டுள்ளார்.
