அடுத்த சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இன்று (பிப்ரவரி 6) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகம் தொடங்கியுள்ளது.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தவெக சார்பில் தேர்லில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்பமனுக்கள் இன்று முதல் பெறப்பட உள்ளன.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 14-ஆம் தேதி வரை 234 தொகுதிகளுக்கும் தேவையான விருப்பமனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களைப் பெறுவதற்கான மாநில நிர்வாகிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று மாவட்டச் செயலாளர்கள் விருப்பமனுக்களை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபி தொகுதியில் போட்டியிட இன்று விருப்பமனு அளிக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
அதேசமயம் தேர்தல் நெருங்கி வரும் நிலையிலும் கூட தவெக கூட்டணி அமைத்து போட்டியிடுமா தனித்து போட்டியிடுமா என்பதை அக்கட்சி இதுவரை தெளிவுபடுத்தவில்லை.
