விஜய்-க்கு மாணவிகள் முத்தம்- வேல்முருகனின் தரம்தாழ்ந்த, மனசாட்சியற்ற விமர்சனம்- தவெக கண்டனம்

Published On:

| By Minnambalam Desk

Velmurugan Vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை மாணவிகள் கட்டிப் பிடித்து முத்தமிடுவதை விமர்சித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ.வுக்கு தவெக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. TVK Condemns Velmurugan’s Conscience-Less Critique

தவெக கொள்கை பரப்பு இணைச் செயலாளர். தாஹிரா கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுத் தேர்வு எழுதி நல்மதிப்பெண் பெற்ற மாணவச் செல்வங்களை அவர்தம் பெற்றோர்களுடன், தன் சொந்தச் செலவில் சென்னைக்கு வரவழைத்து, அவர்களைப் பாதுகாப்பாகத் தங்கவைத்து. உபசரித்து. கல்வி விழாவில் பங்கேற்கச் செய்து, அவர்களைக் கவுரவித்து மீண்டும் அதே பாதுகாப்புடன் வழியனுப்பி வைப்பதை எவ்வித எதிர்பார்ப்புமின்றி ஆண்டுதோறும் செய்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் எங்கள் வெற்றித் தலைவர் அவர்கள்.

ADVERTISEMENT

மேடையில் தன்னிடம் பரிசு பெற வரும் குழந்தைகளை ஆண் பெண் வேறுபாடின்றி. பெருங்கனிவு கொண்ட தந்தையைப் போல அன்பு காட்டி அரவணைக்கிறார். அது அவரது தூய உள்ளத்தின் மிகத் தூய்மையான வெளிப்பாடு. மாசறு மனத்துடன், மாசற்ற மாணிக்கங்களை அரவணைக்கும் எங்கள் வெற்றித் தலைவரை நோக்கி. எம்.எல்.ஏ. பதவிக்காக ஏங்கி, எங்கெங்கோ சென்று அதை அடைந்துவிட்டு, அவர்களுக்கு விசுவாசம் காட்டும் விதமாக, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு.வேல்முருகன் அவர்கள், ஒரு தரம்தாழ்ந்த, மனசாட்சியற்ற விமர்சனத்தை வைத்துள்ளார்.

எந்நாளும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது அளவற்ற அன்பும் பாசமும் கனிவும் மரியாதையும் உயர்ந்தபட்ச அளவில் கொண்டுள்ளவர். எங்கள் வெற்றித் தலைவர். வீர மங்கை வேலு நாச்சியாரையும் மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாளையும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களாக ஏற்றதே பெண்குலத்தின் மீது அவருக்கு எத்தகைய மரியாதை இருக்கிறது என்பதை இந்த உலகிற்குப் பறைசாற்றும். அடிப்படை அரசியல் தெளிவுடையோர்கூட இதை நன்கு உணர்வார்கள். ஆனால், சட்டமன்றத்தில் சண்டமாருதமாக முழங்குவதாகத் தன்னைத் தானே புகழ்ந்துகொள்ளும் அரசியல் தெளிவாளர் திரு.வேல்முருகனுக்கு இதைப் பாலபாடமாக யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை என்றே நம்புகிறோம்.

ADVERTISEMENT

வாழ்வுரிமைக் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை நடத்திக்கொண்டு, தி.மு.க.வில் உறுப்பினர் அட்டை வாங்கிக்கொண்டு, தேர்தலில் அக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு, தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திரு. வேல்முருகன் அவர்களே, தமிழகப் பெண்களையும் பெண் குழந்தைகளையும் அவமரியாதையாகப் பேச உங்களுக்கு எப்படி மனம் வருகிறது?
இதைத் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரான சகோதரி திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் எப்படிக் கண்டும் காணாமல் மவுனமாக இருக்கிறார்? பெண்களை இழிவாகப் பேசும் இதுபோன்ற மலிவான மனநிலை கொண்டவர்களைக் கண்டித்திருக்க வேண்டாமா? அப்பா என்று தன்னை அழைத்து மகிழும் தமிழக முதலமைச்சர் இதைக் கண்டித்திருக்க வேண்டாமா? தி.மு.க. சின்னத்தில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினரல்லவா, இந்த அவதூறு மற்றும் வக்கிர மனப் பேச்சாளர்? இதற்குத் தி.மு.க.வின் பதில் என்னவென்று தமிழகப் பெண்கள் உற்று நோக்கிக் கொண்டுள்ளனர்.

இச்சூழலில், இந்த ஆண்டுக் கல்வி விழாவில். கபட நாடகத் தி.மு.க. போல நீட் தேர்வை நீக்கும் ரகசியம் இருக்கிறது என்ற வடிகட்டிய அரசியல் பொய்யையோ அல்லது நீட் தேர்வுதான் தகுதியின் வெளிப்பாடு என்று பேசும் அரக்க மனம் கொண்ட பிளவுவாத பா.ஜ.க. போல் இரக்கமற்றோ பேசாமல். மாணவச் செல்வங்களின் வாழ்வின் மீது உள்ள கரிசனத்தால்தான் எங்கள் தலைவர். ‘நீட் மட்டும்தான் உலகமா?’ என்று மனத் தைரியம் ஊட்டினார்.

ADVERTISEMENT

மாணவச் செல்வங்கள் அனைவரையும் தன் குழந்தைகளைப் போலவே பார்ப்பவர் எங்கள் வெற்றித் தலைவர். அதனால்தான், பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களும் சரி, குறிப்பாக அந்தப் பெண்களின் தகப்பன்களும் சரி, எங்கள் வெற்றித் தலைவரின் தூய அன்பையும் கருணையையும் கனிவான தந்தைமையையும் முற்றாக உணர்வார்கள். பெண் குழந்தை தந்தையின் இடையே இருக்கும் மாசற்ற கனிவையும் அரவணைப்பையும் உணராதவர்களே. உங்களைப் போன்று இப்படி எல்லாம் வக்கிரம் நிறைந்த அவதூறான எண்ணங்களை உதிர்ப்பர். எனவே, தான் பேசியது தவறு என்பதைத் திரு. வேல்முருகன் அவர்கள் அமைதியாகத் தனியாக அமர்ந்து, தன் மனசாட்சிப்படி யோசித்து உணர்ந்து ஒட்டுமொத்த தமிழகப் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தவறினால், தமிழ்நாட்டுப் பெண்கள் அனைவரும் உங்களை நோக்கிக் கேள்வி எழுப்பத் தொடங்கினால், நீங்கள் நடுங்கிப்போய் நிற்க வேண்டிய நிலை வரும். எனவே. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு.வேல்முருகன் அவர்கள் அவையடக்கத்துடன் பேசுவது நல்லது. இது ஓர் அன்பான எச்சரிக்கை.

தொடர்ந்து பெண்கள் மீது அவமதிப்பைக் காட்டி வரும் கபட நாடகத் தி.மு.க.வினர் மற்றும் அவர்களை அண்டிப் பிழைக்கும் திரு.வேல்முருகன் போன்றோர் பொறுப்பற்றுப் பேசி வருகின்றனர். இதுபோன்ற வக்கிரம் கொண்ட மனப்பிறழ்வு நிலைக்கு மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நலம். தமிழக அரசியலில் இதுவரை இல்லாத ஒருபெரும் வரலாற்று மாற்றமாக ஒட்டுமொத்தப் பெண்கள் இனமே வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் எங்கள் வெற்றித் தலைவர் பின்னால் அணிவகுத்து நிற்கும்போது, இப்படிப்பட்ட அவதூறு பேசும் அரசியல்வாதிகள் இருக்கும் இடம் தெரியாமல் போவது நிச்சயம். இதை இறுதி எச்சரிக்கையாகத் தமிழகப் பெண்கள் சார்பாகவும் தமிழக வெற்றிக் கழகப் பெண் உறுப்பினர்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு தாஹிரா கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share