மத்திய அமைச்சரவை செயலாளராக டி.வி.சோமநாதன் ஐஏஎஸ் நியமனம்!

Published On:

| By christopher

TV Somanathan IAS appointed as Union Cabinet Secretary!

மத்திய அமைச்சரவை செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான அரசாணையை மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இன்று (ஆகஸ்ட் 10) வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் நிர்வாகத்தில் உயரிய பதவி கேபினட் செயலாளர் பதவியாகும். இந்தப் பணியில் அமர்த்தப்படும் மூத்த அரசு அதிகாரி நேரடியாக பிரதமரின் கீழ் செயல்படுவார்.

கடந்த 2019 முதல் 5 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவை செயலாளராக ராஜீவ் கெளபா பணியாற்றி வந்தார். அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் அவருக்கு பதிலாக 1987-ஆம் ஆண்டு பேட்ச் தமிழக பிரிவு மூத்த ஐஏஎஸ் அதிகாரியான டி.வி.சோமநாதன் மத்திய கேபினட் செயலராக இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான அரசாணையை மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் ஆகஸ்ட் 30 முதல் அடுத்த 2 ஆண்டுகளுக்கு மத்திய அமைச்சரவை செயலராக அவர் பதவி வகிப்பார் என்றும், பதவியேற்கும் வரை அமைச்சரவை செயலகத்தில் சிறப்புப் பணி அதிகாரியாக டி.வி.சோமநாதன் பணியாற்றுவார் என்றும் நியமனக் குழுவின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதித்துறை செயலராக அவர் பணியாற்றி வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக டி.வி.சோமநாதன் (2010-11) கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் இணைச் செயலாளராகவும், 2015 முதல் 2017 வரை பிரதமரின் இணை மற்றும் கூடுதல் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது செயலாளராக பணியாற்றியவர் டி.வி.சோமநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

யார் இந்த டி.வி.சோமநாதன் ஐஏஎஸ்?

தமிழ்நாட்டில் பிறந்தவரான டி.வி.சோமநாதன், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை வணிகவியல் பட்டம் பெற்றவர். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும், பொருளாதாரத்தில் எம்.ஏ பட்டமும் பெற்றுள்ளார்.

ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலிலும் படித்துள்ளார். பட்டய கணக்காளராகவும், நிறுவன செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

இந்திய நிர்வாக சேவையில் (ஐஏஎஸ்) பிரதிநிதியாக வாஷிங்டன் டிசியில் உள்ள உலக வங்கியில் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

1987ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், தேசிய அளவில் 2வது ரேங்க் பெற்று சிவில் சர்வீஸ் பணியில் சேர்ந்தார். அவர் தனது பேட்சில் சிறந்த ஐ.ஏ.எஸ் ப்ரோபேஷனராக இருந்ததற்காக அவருக்கு தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் துணை செயலாளர், இணை விஜிலென்ஸ் கமிஷனர், குடிநீர் விநியோக நிர்வாக இயக்குனர், முதலமைச்சரின் செயலாளர், கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வணிக வரி ஆணையர் உள்ளிட்ட  பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

‘கங்குவா’ டிரெய்லர் ரிலீஸ் தேதி இது தான்!

”இந்த பேரழிவு சாதாரணமானது அல்ல” : வயநாட்டை நேரில் கண்ட மோடி உருக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share