பாதிரியார் மீது தாக்குதல்: மாஜி அமைச்சர்கள் மீது கொலை முயற்சி வழக்கு… பின்னணி என்ன?

Published On:

| By Selvam

தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிரியார் தாக்கப்பட்ட விவகாரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் RC (ரோமன் கத்தோலிக்), பெந்தகோஸ்து CSI (சர்ச் ஆப் சவுத் இந்தியா) போன்ற கிறிஸ்தவ அமைப்புகள் உள்ளன. CSI அமைப்புக்கு சுமார் ஐந்து லட்சம் உறுப்பினர்களும், 600-க்கும் மேற்பட்ட சர்ச்சுகளும் இம்மாவட்டத்தில் உள்ளது.

இந்த அமைப்பில் தான் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் இருக்கிறார். ஆறுமுகநேரி CSI கோயிலில் பாதிரியாராக இருக்கக்கூடிய என்.ஜெகன் நேற்று அக்டோபர் 15 ஆம் தேதி சர்ச் பணியை முடித்துவிட்டு மருத்துவமனையில் உள்ள தனது தாயை பார்க்க காரில் சென்றுள்ளார். அப்போது அதிமுகவினர் பாதிரியாரை வழி மறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பாதிரியார் ஜெகன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாதிரியார் மீது நடந்த தாக்குதல் குறித்து தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டோம்…

“முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜூ மற்றும் முன்னாள் எம்எல்ஏ மோகன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் எட்டு கார்களில் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று தூத்துக்குடிக்கு திரும்பினோம்.

அப்போது சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் வரையில் பாதிரியார் ஜெகன் எங்கள் கார்களுக்கு வழி விடாமல் வேண்டுமென்றே சென்றார். ஹாரன் அடித்தும் மதிக்கவில்லை. எப்படியோ வேலுமணி மற்றும் செல்லூர் ராஜூ கார் ஓட்டுனர்கள் பாதிரியார் காரை ஓவர்டேக் செய்து நிறுத்தினர். அப்போது திமிராக பதில் சொன்னதால் எங்களுடன் வந்தவர்கள் கோபப்பட்டு அவர் மீது கை வைத்துவிட்டார்கள்” என்றனர்.

மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் பாதிரியார் ஜெகனைத் தொடர்புகொண்டு கேட்டோம் “தூத்துக்குடி ஏவிஎம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எனது அம்மாவைப் பார்த்துவிட்டு பீச் ரோட்டில் உள்ள CSI அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தேன்.

பின்னால் வந்த அதிமுக கொடிகள் பொருத்திய கார்கள், தொடர்சியாக ஹாரன் அடித்தபடி வந்தனர். என் காரை கண்டெய்னெர் லாரி ஓரத்தில் அணைத்தனர். அதன் பிறகு குறுகிய சாலையில் வேகமாக இடிப்பதுபோல் அணைத்தனர். ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று பயந்தபடியே ஐந்து கிலோ மீட்டர் தூரம் வந்துவிட்டேன்.

தூத்துக்குடி துறைமுகம் மேம்பாலம் கீழே உப்பாறு ஓடை இடது பக்கம் காரை திருப்பினேன். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி,  கடம்பூர் ராஜூ கார் உள்பட மூன்று கார்கள் எனது காரை ஓவர்டேக் செய்து வழி மறித்தனர். முன்னாள் அமைச்சர்கள் காரில் வந்தவர்கள் எனது காரை திறந்து என்னை கீழே இழுத்து தாக்கினார்கள்.

அப்போது வேலுமணியும் கடம்பூர் ராஜூவும் இறங்கி வந்தனர். அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று கையெடுத்து கும்பிட்டு விளக்கத்தை சொல்லி மன்னிப்பு கேட்க முயற்சித்தேன். உடனே வேலுமணியும் கடம்பூர் ராஜூவும் என்னை அசிங்கமாகப் பேசி தாக்க வந்தனர். அப்போது அவருடன் வந்தவர்கள் என்னை மிருகத்தனமாக தாக்கினார்கள்.

அந்த பகுதியில் இருந்தவர்கள் என்னைக் காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சம்பவம் நடந்த நேரம் காலை 11.30 மணி முதல் 12 மணிக்குள் இருக்கும். மாலையில் முத்தையாபுரம் போலீசார் வந்து என்னிடம் ஸ்டேட்மென்ட் வாங்கிட்டு போனார்கள். மக்கள் சேவகரான பாதிரியாரான என்னை இந்த அளவுக்கு தாக்கக்கூடிய இவர்கள் மக்கள் துயரத்தை எப்படி துடைப்பார்கள்” என்றார் ஆவேசமாக.

நேற்று மாலை 4 மணியளவில் அமைச்சர் கீதா ஜீவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிரியார் ஜெகனை பார்த்து ஆறுதல் சொல்லியிருக்கிறார். அங்கிருந்தபடியே காவல் துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பாதிரியாரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜூ, முன்னாள் எம்.எல்.ஏ மோகன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் மீது தூத்துக்குடி முத்தையாபுரம் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

-வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மெட்ரோ ரயில் சேவை நாளை வழக்கம் போல் இயங்கும்!

வேலைநிறுத்தம் வாபஸ்… ஆனால்! சாம்சங் நிறுவனத்திற்கு சிஐடியு கண்டிஷன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share