தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இடம்பெற்றிருந்த காவல் ஆய்வாளர் திருமலை, முதல் நிலை காவலர்கள் சுடலைக்கண்ணு, சதீஷ்குமார், சங்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2018 மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ”தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு நிகழ்வை டிவியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்” என்று தெரிவித்திருந்தார்.
அருணா ஜெகதீசன் அறிக்கை
இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தாக்கல் செய்த அறிக்கை, கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி கூடிய சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ”துப்பாக்கிச் சூட்டை ஊடகங்களில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்” என எடப்பாடி பழனிசாமி சொன்னது தவறானது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அப்போதைய தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், அப்போதைய டிஜிபி ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர்,
எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்துக்கு நிமிடம் தூத்துக்குடியில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொண்டே இருந்தனர் என்றும்,
காவலர் சுடலைகண்ணு என்பவர் மட்டும் மொத்தம் துப்பாக்கியால் 17 ரவுண்ட் சுட்டுள்ளார்” என்றும் அதிர்ச்சி தகவல்கள் அறிக்கையில் வெளியாகின.
தொடர்ந்து அந்த அறிக்கையில், தென்மண்டல ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ், டிஐஜி கபில்குமார் சரத்கர், எஸ்.பி மகேந்திரன், துணை எஸ்.பி லிங்கத் திருமாறன், ஆய்வாளர்கள் திருமலை, ஹரிஹரன் பார்த்திபன், துணை ஆய்வாளர்கள் சொர்ணமணி, ரென்னெஸ்,
முதல் நிலை காவலர்கள் சங்கர், சுடலைக்கண்ணு, சதீஷ்குமார், கண்ணன், தலைமைக் காவலர் ராஜா, இரண்டாம் நிலை காவலர்கள் ராஜா, தாண்டவமூர்த்தி, காவலர் மதிவாணன் உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை’ எடுக்கப்படும் என தெரிவித்தார்.
காவலர்கள் சஸ்பெண்ட்
அருணா ஜெகதீசன் அறிக்கையின் எதிரொலியாக, காவல் ஆய்வாளர் திருமலை, முதல் நிலை காவலர்கள் சுடலைக்கண்ணு, சதீஷ்குமார்,
சங்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு இன்று (அக்டோபர் 21) உத்தரவிட்டுள்ளார்.
காவல் ஆய்வாளர் திருமலை, துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்தவர்.
இவர் தற்போது நெல்லை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையாளராகப் பணி புரிந்து வருகிறார்.
மோனிஷா
