தமிழ்நாடு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணைக்கு உதவிட அமலாக்கத்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2001-06 அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையே சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் 2020 ஆம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ண மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு தொடர்ந்தது. 2-2-2022 அன்று அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6.5 கோடி ரூபாய் வழிகாட்டு மதிப்புள்ள (சந்தை மதிப்பு இன்னும் பல மடங்கு அதிகம்) சொத்துகளை முடக்கியது.
இந்த சூழலில் கடந்த 2023 ஏப்ரல் 18 ஆம் தேதி அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடக்கும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அமலாக்கத்துறையின் சென்னை மண்டல துணை இயக்குனர் கார்த்திகேயன் தாக்கல் செய்த அந்த மனுவில்.
“சொத்துக் குவிப்பு வழக்கை எதிர்கொண்டு வரும் அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது தமிழ்நாடு அரசில் அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில் இவ்வழக்கை நடத்த வேண்டிய மாநில அரசு இவரது நலன்களை காக்க அக்கறை கொண்டுள்ளது. இதன் மூலம் இவ்வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்ற சந்தேக நிழல் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே இந்த வழக்கில் ப்ராசிகியூஷனில் மத்திய அரசின் ஏஜென்சி தலையிட்டு வழக்கை பாரபட்சமின்றி நடத்த உதவுவது அவசியமாகிறது. இது பொது நலத்தின் பாற்பட்டது.
வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை இன்னொரு தரப்பும் வழக்கில் சேர்ந்துகொள்ள அனுமதித்து தீர்ப்பளித்துள்ளன.
எனவே நீதிமன்றம் சட்டப் பிரிவு 301 (2) மற்றும் 302 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் அமலாக்கத் துறையை வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக (assist the prosecution) வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும், இந்த வழக்கில் மாநில அரசின் வழக்கறிஞருக்கு உதவுவதற்காக எழுத்துபூர்வமான ஆவணங்களையும் தாக்கல் செய்ய அமலாக்கத்துறையை அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கீழமை நீதிமன்றங்களில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ள அமலாக்கத்துறை மனு செய்தது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை. இதன் மூலம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மட்டுமல்ல… வேறு எவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளிலும் அமலாக்கத்துறை தலையிடலாம் என்பதால் அனிதா ராதாகிருஷ்ணன் மட்டுமல்ல… சொத்துக் குவிப்பு வழக்கை எதிர்கொண்ட மற்ற அமைச்சர்களும் அமலாக்கத்துறையின் மூவ் மூலம் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மனு குறித்து மின்னம்பலத்தில் ஒரு வருடமாக தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்திருக்கிறோம்.
2023 ஏப்ரல் 19 ஆம் தேதி அமலாக்கத்துறை தாக்கல் செய்த இந்த மனு, விசாரணக்கு எடுக்காமல் பல முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
ஒருவேளை அனிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தலையிட அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டால்… சொத்துக் குவிப்பு வழக்கை எதிர்கொள்ளும் மற்ற அமைச்சர்கள் விவகாரத்திலும் ED மூக்கை நுழைக்க முகாந்திரம் ஏற்பட்டுவிடும். அதனால், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவே இவ்வழக்கில் கவனம் செலுத்தினார்.
விசாரணையின் போது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், ‘அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இதுவரை 80% விசாரணை முடிந்துவிட்டது. இந்நிலையில் அமலாக்கத்துறை உள்ளிட்ட எந்த மூன்றாவது அமைப்பின் குறுக்கீடும் தேவையில்லை” என்று வாதிடப்பட்டது.
இதன் அடிப்படையில், இன்று 03.07.2024-தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஐயப்பன், அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்து, மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் அனிதா ராதாகிருஷ்ணன் மட்டுமல்ல, பல அமைச்சர்களும் நிம்மதி அடைந்துள்ளனர். அதேநேரம் தூத்துக்குடி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்கான ஆலோசனையை ED தொடங்கியுள்ளது என்கிறார்கள் அமலாக்கத் துறை வட்டாரங்களில்.
–வேந்தன்
அஸ்தானாவில் நடக்கும் ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாடு!!!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் : 29.7% மெத்தனால் கலப்பு… அரசு தகவல்!