மதுரையில் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக போராடிய 5,000 பேர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகரில் இருந்து சுமார் 20 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, அரிட்டாபட்டி என்ற கிராமம். மேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட இந்தப் பகுதியில் 48 கிராமங்கள் உள்ளன. 72 ஏரிகள், 200 நீரூற்றுகள், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பாறை கட்டமைப்புகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், 250-க்கும் அதிகமான பறவையினங்கள், குடைவரை கோவில்கள் என தனித்துவம் வாய்ந்த பகுதியாக அரிட்டாபட்டி உள்ளது. சுற்றிலும் மலைக் குன்றுகள், சுத்தமான நீரோடைகள் என இயற்கை எழில் கொஞ்சும் இந்தக் கிராமங்கள், தற்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது.
அதற்காக காரணம், டங்ஸ்டன் கனிம சுரங்கம் தொடர்பான ஏல அறிவிப்பு. கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட ஏல அறிவிப்பின்படி, மதுரை மேலூர் தாலுகாவில் உள்ள நாயக்கர்பட்டியில் 2,015.51 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமையும்.
இந்த ஏலத்தில் வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தேர்வானதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிராகவே மேலூர் பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டக்காரர்களின் மீது அரசு வழக்கு பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில், மதுரை மாநகராட்சி சார்பில், அம்ருத் 2.0 திட்டத்தில் மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், வடக்கு, தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் 31 வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.471.89 கோடியில் 500 கி.மீட்டர் தூரத்திற்கான புதிய பாதாள சாக்கடை திட்டப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா உத்தங்குடியில் நடந்தது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், “முதல்வர் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து மேலூர் மக்களுக்காக துணை நின்றார். அண்ணாமலை மேலூர் மக்களை சந்தித்து டங்ஸ்டன் திட்டம் முழுமையாக மாநில அரசு செயல்படுத்தக்கூடிய திட்டம் என கூறியுள்ளார். நமது அரசு மீது மத்திய அரசு வதந்தியை பரப்புகிறது.
முதல்வர் மேலூர் பகுதியில் இருந்து ஒரு பிடி மண்ணைகூட அள்ள முடியாது என தெளிவாக கூறியுள்ளார். நான் இருக்கும் வரையிலும் வராது. வரும் சூழல் ஏற்பட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என அவர் உறுதியளித்துள்ளார். டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக போராடிய மேலூர் பகுதி மக்கள் 5,000 பேர் மீதான காவல் துறையின் வழக்கு, முதல்வரின் அறிவுறுத்தலின்படி ரத்து செய்யப்படுகிறது” என்றார்.
இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கலாக தமிழர்கள் கொண்டாட வேண்டும் என டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து மதுரை மாவட்டம் மேலூர் பகுதி மக்கள் கடந்த இரண்டு மாதமாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தத் திட்டத்தை ரத்து செய்யும் உறுதியான அறிவிப்பை மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை.
எனவே போராட்டம் நடத்தி வரும் மேலூர் பகுதி மக்களுக்கு துணை நிற்கும் வகையில் இந்த பொங்கல் பண்டிகையை உலகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில், நகர வீதிகளில், கிராமங்களில் டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கலாக கொண்டாட அழைப்பு விடுகின்றோம்’ என்று தெரிவித்துள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : பிரதமர் மோடி திறக்கும் சுரங்கப்பாதை முதல் மகா கும்பமேளா தொடக்கம் வரை!
பெரியாரின் தத்துவமும், முரண்கள அரசியல் இயக்கமும், வரலாற்றுத்தனித்துவமும்
கிச்சன் கீர்த்தனா : ரகடா பாட்டீஸ்
மனசுல பெரிய அஜித் குமாருன்னு நினைப்பு… அப்டேட் குமாரு
அயலகத் தமிழர் தினம்… இத்தனை கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தமா?