கோவா திரைப்பட விழாவில் ரிஷப் ஷெட்டியை பாராட்டி காந்தாரா படத்தின் தெய்வ காட்சியை செய்து காட்டிய ரன்வீர் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துளு நாடு மக்கள் போர்கொடி தூக்கி உள்ளனர்.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த படம் காந்தாரா மற்றும் காந்தாரா சாப்டர் 1. கர்நாடகத்தின் தொன்மம், கடவுள், நில அரசியலை மையமாக வைத்து உருவாகிய காந்தாரா படம் 2022 இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து இதன் முன்னோக்கிய கதையாக சாப்டர் 1 என்ற பெயரில் எடுக்கப்பட்ட படம் அக்டோபர் இரண்டாம் தேதி வெளியானது.
வணிக அளவில் பெரிய வெற்றியை கொடுத்த காந்தாரா படம் கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்களின் தெய்வா என்ற கடவுளை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை இந்திய சர்வ தேச திரைப்பட விழா கோவாவில் நடந்தது. இந்த விழாவில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நடிகர் ரஜினி காந்த் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரன்வீர் சிங், காந்தாரா திரைப்படத்தில் வரும் தெய்வத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ரன்வீர் சிங் பேசுகையில், காந்தாரா படத்தை திரையில் பார்த்தேன். ரிஷப் ஷெட்டியின் நடிப்பு சிறப்பாக இருந்தது குறிப்பாக அந்த பெண் ஆவி ரிஷப் ஷெட்டிக்கு புகுந்த பின் அவர் நடிப்பு என சொல்லியபடி தெய்வ கதாபாத்திர முக பாவனைகளை செய்து காட்டினார்.
இந்நிலையில் ரன்வீர் சிங், தெய்வா சாமி ஒரு பெண் தெய்வம் என்று அவமதிக்கும் வகையில் பேசியதாகவும், அந்த கடவுளை அவமதிப்பது போல் கிண்டலான முக பாவனைகளை செய்து காட்டியதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் நடிகர் ரிஷப் ஷெட்டி முன்பே நடந்துள்ளது. ஆனால் ரன்வீர் செயலுக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையே இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள துளு நாடு மக்கள் ரிஷப் ஷெட்டியும், ரன்வீர் சிங்கும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை எடுத்துள்ளனர்.
துளு நாடு மக்கள் சமுதாய தலைவர் சாமடி சஞ்சாலகா கமலாக்ஷா கந்தகாடு இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரன்வீர் சிங்கின் செயல் எங்கள் தெய்வத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. அவரது செயலால் எங்களது மனம் புண்பட்டுள்ளது. ரன்வீர் சிங் கத்ரி மஞ்சுநாதா கோயிலுக்கு வந்து தெய்வா சாமி சன்னதியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல் ரிஷப் ஷெட்டியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
