மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் உடல்நிலை தொடர்பாக தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அ.ம.மு.க பொதுச்செயலாளரான டி.டி.வி. தினகரன், கட்சி நிர்வாகிகளின் இல்ல விழாக்களில் கலந்துகொள்வதற்காக தஞ்சாவூர் சென்றிருந்தார்.
இந்தநிலையில் நேற்று (செப்டம்பர் 2) மதியம் முதலே அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டதாகவும் தொடர்ந்து வாந்தி எடுத்தாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து தஞ்சாவூரில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து இன்று (செப்டம்பர் 2) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.
மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டும். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டும்” என அதில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருடைய உடல்நிலை குறித்து மீனாட்சி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மருத்துவமனையின் பொதுமேலாளர் டாக்டர் கே.பாலமுருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நேற்று எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், வயிற்று வலி, வாந்தி மற்றும் நீரிழப்பால் பாதிக்கப்பட்டார்.
அந்த வகையில், அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அவரது உடல்நிலை சீராக உள்ளது. நன்றாக குணமடைந்து வருகிறார்.
தொடர்ந்து அவரது உடல்நிலையை எங்கள் மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
