எடப்பாடி பழனிசாமியுடன் அரைக்கால் சதவிகிதம் கூட இணைய வாய்ப்பில்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அமமுக அலுவலகத்தில் டிடிவி தினகரன் இன்று (நவம்பர் 17) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
கூட்டணி தொடர்பாகப் பேசிய அவர், “ திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டால் தான் முடியும் என்று தஞ்சாவூர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தேன்.
அதைத்தவிர்த்து அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறேன் என்று சொல்லவில்லை. அமமுக சுதந்திரமான இயக்கம். கூட்டணி வைக்க வேண்டுமானால் வைக்க முடியுமே தவிர இணைய முடியாது.
மெகா கூட்டணி பற்றி பேசுபவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். திமுகவை வீழ்த்த வேண்டுமெனில் அம்மாவுடைய தொண்டர்கள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும்.
அரைக்கால் சதவீதம் கூட பழனிசாமியுடன் செல்வேன் என்று நான் சொன்னதில்லை. இன்று அதிமுக செயல்படாத கட்சியாக உள்ளது. அதிமுக தலையில்லாத முண்டமாக இருக்கிறது.
நாளையே ஒரு இடைக்கால தேர்தல் வருகிறது என்றால் வேட்பாளர்களுக்குப் படிவங்கள் கூட வழங்க முடியாத நிலையில் அதிமுக உள்ளது. அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கூட அவர்களால் வேட்பாளர்களை நிறுத்த முடியவில்லை.
2019 தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்று எங்களால் சொல்ல முடியவில்லை என்பதால் அதுவும் எங்களது தோல்விக்குக் காரணம் என்று கூறியிருந்தேன்.
வரும் தேர்தலில் அமமுக ஒரு அணிலைப் போல் செயல்படும். இந்த தேர்தலில் சிறப்பாக பணியாற்றி பிரதமரைத் தேர்ந்தெடுக்கும்.
தொடர்ந்து நாங்கள் பின்னடைவைத்தான் சந்திப்போம் என்று சொல்வார்கள் என்றால் அது அவர்களுடைய விருப்பம்.
இன்று ஒரு மாவட்டத்துக்கு இரு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பன்னீர் ஒருவரை நியமிக்கிறார். பழனிசாமி ஒருவரை நியமிக்கிறார்.
பதவி வெறி, பண பலம் இருப்பதன் காரணமாகச் சிலர் ஆணவமாகப் பேசுவது சரியா?” என்று எடப்பாடி பழனிசாமியைக் குறிப்பிட்டுப் பேசினார்.

மேலும் அவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக டெல்லியைச் சேர்ந்த சில நலம் விரும்பிகள் என்னிடம் பேசினார்கள். தனியாக போட்டியிட வேண்டாம். எங்களது கூட்டணிக்கு வாங்க என்று கூறினார்கள். ஆனால் அது முடியாமல் போனது.
இப்போதும் அந்த நலம் விரும்பிகளுக்காகத்தான் கூட்டணி பற்றிப் பேசுகிறேனே தவிர, யாரோ ஒரு சுயநலவாதிக்காக அல்ல.
தேர்தல் என்று வந்தால் கூட்டணி இல்லை என்றாலும், எங்களது இலக்கை அடையும் வரை தொடர்ந்து போராடுவோம்.
கூட்டணி என்றால் இரண்டே ஆப்ஷன் தான் உள்ளது. ஒன்று காங்கிரஸ், மற்றொன்று பாஜக. அவர்களுடன் முடியாத பட்சத்தில் நாங்கள் தனியாக நிற்கவும் தயாராக இருக்கிறோம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் கூட்டணியில் செல்ல வேண்டும் என்பது தான் சரியாக இருக்கும்.
அதுபோன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி வரும் என்று நான் நினைக்கவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லும் போது கூட, 25, 26 சீட்டில் பாஜக வெற்றி பெறும் என்கிறார். அதுவும், அதிமுக தலைமையில் கூட்டணி என்று சொன்னாரே தவிர பழனிசாமி தலைமையில் கூட்டணி என்று அவர் சொல்லவில்லை.
பாஜக 25 எம்.பி.க்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்றால், 40 தொகுதிகளிலும் நிற்க வேண்டும். அப்படி என்றால் மெகா கூட்டணியில் தலைவராக இருந்து எடப்பாடி பழனிசாமி விட்டு கொடுக்கப் போகிறாரா?.
தனித்து நிற்க தைரியமில்லாதவர் எடப்பாடி பழனிசாமி. இரட்டை இலை சின்னம் இல்லை என்றால் பழனிசாமி நிலை என்னவென்று அனைவருக்கும் தெரியும். நகராட்சி தேர்தலில் கூட அவரால் ஜெயிக்க முடியாது” என கூறினார்.
திமுக மத்திய அரசுக்கு பயப்படுகிறது. அன்று கோ பேக் மோடி என்று கருப்பு பலூன் விட்டவர்கள் இன்று மழைக்காக கருப்பு குடை கூட எடுத்துச் செல்வதில்லை. பாஜகவை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காகக் காங்கிரஸைக் கூட கழட்டி விடுவார்கள். அதனால் தான் இரண்டு ஆப்ஷன் இருக்கிறது என்று சொன்னேன்” என்று குறிப்பிட்டார்.
பிரியா