ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கூட்டணிக்குத்தான் செல்வோம் – டிடிவி தினகரன் திட்டவட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கூட்டணிக்குத்தான் செல்வோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், இன்று (ஜனவரி 5) தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மீண்டும் அமமுக பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், மக்கள் நலன் கருதி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார். திருப்பரங்குன்றம் குறித்த தீர்மானம் எந்தக் கட்சிக்கும் , அமைப்புக்கும் எதிராக நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டின் அமைதி கெட்டுவிடக் கூடாது என்பதால் தான் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் வெற்றி-தோல்வி கடந்து செயல்படுகிற இயக்கம் அமமுக என்றார்.

மேலும், கடந்த 2021-ம் ஆண்டு அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் அதைப் புரிந்துகொள்ளாமல் ஆட்சியை கோட்டை விட்டுவிட்டார்கள். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெறாததற்கு காரணம், ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது என்ற எனது முடிவால்தான்.

ADVERTISEMENT

இந்த தேர்தலில் அமமுக சட்டமன்றத்திற்குள் ஆளும் கட்சியாகச் செல்ல உள்ளது. இந்தத் தேர்தலில் அமமுக கை காட்டுபவர் தான் முதல்வராக வர முடியும். அதற்காக யாரிடமும் சமரசம் செய்துகொள்ளும் தலைவர் நான் இல்லை என்றார்.

சிலர் ஏதேதோ செய்திகளையும் வதந்திகளையும் பரப்புகிறார்கள். யாரும் கவலைப்பட வேண்டாம். தேர்தல் நேரத்தில் யார் எதிரி? யார் துரோகி? யார் நண்பன்? என்பதெல்லாம் என் கண்ணுக்குத் தெரியாது. தமிழக மக்களுக்கு எந்த ஆட்சி அமைந்தால் நல்லதோ அதைச் செய்திட என் மீது நம்பிக்கை வைத்து அதிகாரத்தை கொடுத்துள்ளீர்கள். உறுதியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கௌரவமான இடங்களைப் பெற்று ஆட்சிக் கூட்டணியில் ஆட்சி அமைப்போம்.

ADVERTISEMENT

இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடுகின்ற தொகுதிகளும், நம் கூட்டணி வெற்றிக்காகவும் சிறப்பாக செயல்பட வேண்டும். முடிவு எடுக்க இன்னும் 30 நாட்கள் உள்ளது. நல்ல முடிவு எடுப்போம் எனப் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share