புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் பிறந்த நாளான இன்று, அவரது சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “எனக்கு ஆதரவாகவும் எதிராகவும் செய்திகள் வருகின்றன. ‘தினகரன் தலைமறைவாகிவிட்டார்’, ‘தயக்கத்தில் வீட்டில் படுத்திருக்கிறார்’, ‘அவர் சோர்ந்துவிட்டார்’ என்றெல்லாம் செய்திகள் வெளியாகின்றன.எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. என் மனதில் எந்தப் பயமும் இல்லை, எந்தக் கனமும் இல்லை. என் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை உரிய இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.
நான் தேர்தலில் போட்டியிடுவேனா என்பதைக்கூட இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனால், ‘நான் ஆண்டிப்பட்டியிலும் உசிலம்பட்டியிலும் போட்டியிடுகிறேன்’ என்றெல்லாம் சொல்கிறார்கள். நான் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
நாங்கள் கூட்டணிக்குச் செல்வதை உரியவர்கள் அறிவிப்பார்கள். அவர்கள் அறிவித்த பிறகு உங்களுக்குத் தெரியவரும். அதுதான் ஒரு பண்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் ஒரு கூட்டணிக்குத் தலைமை என்றால் அதை நான் அறிவிப்பேன். ஆனால், நான் ஒரு கூட்டணியில் சேரும்போது, அந்தக் கூட்டணிக்குத் தலைமை தாங்குபவர்கள் அதை வெளிப்படையாக உங்களிடம் அறிவிப்பார்கள். அதுவரை தயவு செய்து என்னை அமைதியாக இருக்க விடுங்கள்” என்றார்.
டிடிவி தினகரன் தனது எக்ஸ் பதிவில், “பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் இதயக்கனி, ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல், கோடிக்கணக்கான மக்களின் புன்னகையாகவும், புது நம்பிக்கையாகவும் திகழ்ந்த ஆகச்சிறந்த ஆளுமை பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினம் இன்று…
மக்களுடன் மக்களாக வாழ்ந்து, அவர்களுக்காக அயராது உழைத்து, நாடுபோற்றும் நல்லபல திட்டங்களை செயல்படுத்தி, தமிழக மக்களின் இதயக் கோயிலில் மக்கள் திலகமாய், மன்னாதி மன்னராய் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.” என தெரிவித்துள்ளார்.
