எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டைதான் – NDA வில் இணைந்த டிடிவி தினகரன்

Published On:

| By Pandeeswari Gurusamy

எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டைதான் என பாஜக கூட்டணியில் இணைவதை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகிய நிலையில், இன்று மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதிமுக-பாஜக கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். அந்ந கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பேச உள்ளனர்.

இந்தச் சூழலில், அதிமுக-பாஜக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமக, தமாகா, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. கூட்டணியில் தேமுதிக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில், இன்று தேமுதிகவுடன் பாஜக மேலிடப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரன், இன்று அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய உள்ள நிலை அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “என்னதான் இருந்தாலும் எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டைதான். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ என பொதுக்குழுவில் சொல்லிவிட்டேன். நான் பழையதை நினைத்து விட்டு, கட்சி நலனையும் தமிழ்நாட்டு நலனையும் பின்னுக்கு தள்ளிவிடக் கூடாது என்பதற்காக பொது நோக்கோடு நாங்கள் விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை. எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டை மட்டுமே. ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்ற முறையில் ஓரணியில் திரண்டு, மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை மக்கள் ஆட்சியாக கொண்டு வருவதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து பியூஸ் கோயலை நேரில் சந்தித்த டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். ஆனால் டிடிவி தினகரன் கூட்டணியில் இணைந்த போது எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக முக்கிய தலைவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கடந்த சில நாட்களுக்கு முன்பு “துரோகத்தை எப்படி ஏற்க முடியும்” என எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன், தற்போது என்டிஏ கூட்டணியில் இணையும் நிலையில், “ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவோம்” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share