விசிக நடத்தும் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டிற்கு அமமுக ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (அக்டோபர் 2) தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துக்கொண்டு அதிமுக வேட்பாளர்களை நிறுத்தினார் எடப்பாடி பழனிசாமி. எம்.ஜி.ஆரால் திமுகவிற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட சின்னம், இன்று திமுகவின் வெற்றிக்காக மறைமுகமாக பயன்படுகிறது. 2026 தேர்தலுக்கு பிறகு அதிமுகவிற்கு பழனிசாமி முடிவுரை எழுதி விடுவார்.
மது ஒழிப்பு தமிழ்நாட்டிற்கு அவசியமான ஒன்று. மகாத்மா காந்தி பிறந்தநாளில் விசிகவின் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடப்பது சிறந்தது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு படிப்படியாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக அரசு வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்பு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
மதுவிலக்கை அமல்படுத்த ஏன் காலதாமதம் செய்கிறீர்கள் என்று கூட்டணியில் இருந்துகொண்டே திமுகவுக்கு கிடுக்குப்பிடி போட்டுள்ளார் திருமாவளவன். திமுகவை மாநாட்டில் கலந்துகொள்ள வைத்துள்ளார். விசிக மாநாட்டிற்கு எங்களுக்கு அழைப்பு வரவில்லை என்றாலும், அந்த மாநாட்டிற்கு அமமுக சார்பில் ஆதரவு தெரிவிக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது குறித்து பேசிய டிடிவி தினகரன், “முதலமைச்சர் சட்டப்படி தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தான் துணை முதலமைச்சர் பதவியை உதயநிதிக்கு கொடுத்துள்ளார். ஆனால், இவ்வளவு விமர்சனம் வரும் அளவுக்கு ஏன் இந்த அவசர கதியில் இந்த பதவி கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் இப்போது எல்லோரது மனதிலும் எழுந்துள்ள கேள்வி.
உதயநிதி துணை முதலமைச்சர் ஆனதால் எந்தவித பெரிய மாற்றமும் நடைபெறபோவது இல்லை. அவர்களது குடும்பத்திற்கு மகிழ்ச்சியான செய்தி. தமிழ்நாட்டு மக்களுக்கு இது விமர்சனத்திற்குரிய செய்தி” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயநிதி செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்!
எப்போதுமே எளிமையான உணவுதான்… ஞாயிற்றுக்கிழமை மட்டும் இட்லியாம்!- முகேஷ் அம்பானியின் உணவு ரகசியம்!