வைஃபை ஆன் செய்ததும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தொடர்பான ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடப்பதைப் பற்றிய செய்தி ஒன்று இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அமமுக பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். ‘2024 தேர்தலில் திமுக, அதைச் சார்ந்த கூட்டணிக்கு எதிராகத்தான் களமிறங்குவோம். இரண்டில் ஒரு தேசிய கட்சியோடு கூட்டணி வைக்கலாம். அதற்கு வாய்ப்பில்லை என்றால் தனித்து கூட போட்டியிடுவோம்’ என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் டிடிவி தினகரன். நேற்று தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ‘பாஜகவோடு எனக்கு எப்போதும் உறவு இருந்தது கிடையாது’ என்றும் கூறியிருக்கிறார்.
தினகரன் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியை குறிவைத்திருக்கிறார் என்றும் தகவல்கள் தென் மாவட்டத்தில் பரவி வருகின்றன. இந்த தகவல்களை வலிமைப்படுத்துவது போல தினகரனும் சிவகங்கையை குறிவைத்து அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் தினகரன் மீதான பழைய ஃபெரா வழக்கு ஒன்று திடீரென அவருக்கு புது தலைவலி ஆகுமா என்றும், தினகரன் தேர்தலில் நிற்பதற்கே அந்த வழக்கு முட்டுக் கட்டை போடுமா என்றும் செய்திகள் வருகின்றன.
தினகரன் அதிமுக எம்.பி.யாக இருந்தபோது அவரது வங்கிக் கணக்குக்கு 62.61 லட்சம் அமெரிக்க டாலர் டெபாசிட் செய்யப்பட்டது. இதை டெபாசிட் செய்தவர் அங்கீகாரம் பெற்ற முகவர் இல்லை. இந்த பணத்தை தினகரன் இங்கிலாந்தில் இருக்கும் சில நிறுவனங்களுக்கு மாற்றியதாகவும் அமலாக்கத் துறை தினகரன் மீது வழக்குத் தொடர்ந்தது.
இது தொடர்பாக தினகரனுக்கு அமலாக்கத் துறை இயக்குனரகம் 31 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. அவரது அக்கவுன்டுக்கு வந்த அமெரிக்க டாலரின் மதிப்பே அப்போது சுமார் 23 கோடி ரூபாய். இதைச் சொல்லி அமலாக்கத்துறை மேல் முறையீட்டு ஆணையத்தில் அப்பீல் செய்தார் தினகரன். அதை விசாரித்து அபராதத்தை கொஞ்சம் குறைத்து 28 கோடி ரூபாய் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது அமலாக்கத்துறை ஆணையம். ஆனால் இதையும் டிடிவி தினகரன் செலுத்தவில்லை. உச்ச நீதிமன்றம் வரை சென்றும் தினகரன் செலுத்த வேண்டிய அபராதம் உறுதி செய்யப்பட்டது.

ஆனாலும் தினகரன் தரப்பில் இத்தொகை செலுத்தப்படாததால்… அமலாக்கத்துறை சார்பில் தினகரனுக்கு, ‘நீங்கள் இந்த அபராதத்தை செலுத்தாததால்… உங்களை திவால் ஆனவர் என்று அறிவிக்கலாமா?’ என்று நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், ‘அமலாக்கத்துறை தினகரனிடம் இருந்து அபராதத்தை வசூலிக்க சிவில் நீதிமன்றத்தைதான் அணுக வேண்டும். அதை விட்டுவிட்டு தினகரனை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது’ என்று தீர்ப்பளித்து அந்த நோட்டீசை ரத்து செய்துவிட்டது.
இதை எதிர்த்து அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சில் அப்பீல் செய்தது. இந்த வழக்கு ஆகஸ்டு 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், ‘உச்ச நீதிமன்றமே தினகரனின் அபராதத்தொகையை உறுதி செய்துவிட்டது. ஆனபோதும் அவர் தொடர்ந்து தாமதித்து வருவதால், அவரை திவால் ஆனவராக அறிவிக்குமாறு நாங்கள் கேட்பதில் சட்டப்படி எந்தத் தடையும் இல்லை’ என்று வாதிட்டார்.
இவ்வழக்கில் டிடிவி தினகரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குமார், ‘ஒருவரை திவால் ஆனவர் என்று அறிவிப்பதற்கு பல்வேறு சட்ட வழிமுறைகள் உள்ளன. அபராதத்தை செலுத்தவில்லை என்பதாலேயே திவால் ஆனவர் என்றெல்லாம் அறிவித்துவிட முடியாது’ என்று வாதாடினார். வழக்கு செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே அமமுகவினரிடையே, ‘இந்த வழக்கால் டிடிவி தினகரன் வரும் எம்பி தேர்தலில் நிற்பதில் சிக்கல் ஏற்படுமா?’ என்ற சந்தேக விவாதம் எழுந்துள்ளது. இந்திய சட்ட விதிகளின்படி ஒருவர் தேர்தலில் நிற்க வேண்டுமென்றால்… அவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும், எந்த நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக இருக்கக் கூடாது, அவர் வங்கிகளாலோ, நீதிமன்றத்தாலோ திவாலானவர் என்று அறிவிக்கப்பட்டிருக்கக் கூடாது போன்றவை முக்கியமான தகுதிகள். இதை அடிப்படையாக வைத்துதான் அமமுகவினரிடத்தில் தினகரன் தேர்தலில் நிற்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘திவால் ஆனவர்கள் தேர்தலில் நிற்க முடியாது என்பது சட்டப்படி உண்மைதான். ஆனால் திவால் ஆனவர்கள் என்பதற்கான சட்ட ரீதியான நிலை என்பதற்கு பல வரையறைகள் உள்ளன. தினகரன் கட்டவேண்டிய அபராதத் தொகையை அவரது சொத்துகள் மூலம் திரட்ட அமலாக்கத்துறை முயற்சிக்கலாம். அப்படி அவருக்கு சொத்துகள் இல்லை என்றால் அவருக்காக அவரது நண்பர்களும் கட்சி நிர்வாகிகளும் வருமான வரிக் கணக்கு காட்டப்பட்ட தங்களது பணத்தை கட்ட முன் வரலாம். இதெல்லாம் நடக்கவில்லை என்றால் கூட தினகரனை அவ்வளவு எளிதாக திவால் ஆனவர் என்று அறிவித்துவிட முடியாது.
ஒருவேளை வங்கியோ, நீதிமன்றமோ அவரை திவால் ஆனவர் என்று அறிவித்தாலும் அதை எதிர்த்து சட்ட ரீதியாக அவர் அப்பீல் செய்ய முழு உரிமை உள்ளது. உச்ச நீதிமன்றத்தால் அது உறுதி செய்யப்பட்டால்தான் அவர் முழுமையாக திவால் ஆனவராக அர்த்தம். இதெல்லாம் நீண்ட காலம் பிடிக்கக் கூடிய விஷயங்கள். எனவே தினகரன் தேர்தலில் நிற்பதற்கு இந்த ஃபெரா வழக்கு எவ்வித உடனடி பாதிப்பையும் ஏற்படுத்தாது.
ஆனாலும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை தீவிரம் காட்டுவதற்கு எடப்பாடியின் டெல்லி லாபியும் முக்கியமானதாக இருக்கிறது என்கிறார்கள் அமமுகவினர். ‘எடப்பாடிக்கு இப்போது பெரிய அச்சுறுத்தலாக சசிகலாவோ, ஓபிஎஸ்சோ இல்லை. சசிகலாவுக்கும் கட்சி இல்லை, ஓபிஎஸ் சுக்கும் கட்சி இல்லை. ஆனால் டிடிவி தினகரன் தான் இப்போது கள ரீதியாக அமைப்பு ரீதியாக எடப்பாடிக்கு எதிராக இருக்கிறார். எனவே இந்த வழக்கில் எப்படியாவது தினகரனின் அரசியல் வாழ்வை முடிவுக்குக் கொண்டுவர கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் எடப்பாடி தரப்பினரும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் திவால் திவால் என்று தினகரனை மையமாக வைத்து பேச்சு எழுவது அவரது இமேஜுக்கு சறுக்கல்தான்’ என்கிறார்கள் அமமுக நிர்வாகிகள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
கனிமொழி பற்றி அவதூறு பாடல் : அதிமுக மீது தமிழ்நாடு முழுவதும் புகார்!
