செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் என்.டி.ஏ பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அப்போது பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதிலும் இன்று வசந்த பஞ்சமி.
வசந்த பஞ்சமி என்பது உலகத்தையே இயக்குகின்ற சக்தியின் ஆற்றல் பெருக தொடங்கும் நாள் என்பது மக்களின் நம்பிக்கை. இன்றைய தினம் தமிழகத்துக்கு வருகைத் தந்த பிரதமரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேசிய தலைவரான பிரதமர் மோடியை வரவேற்கிறேன்” என்றார்
தொடந்து ஈபிஎஸை வரவேற்று பேசினார்.
’தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழ்நாடு தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பெருமதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமி’ என்று கூட்டணி அமைந்த பிறகு முதன்முறையாக பொதுவெளியில் எடப்பாடி பழனிசாமி பெயரை டிடிவி தினகரன் குறிப்பிட்டு வரவேற்றார்.
மேலும் அவர், “தொடர்ந்து மூன்று முறை இந்தியாவின் பிரதமராக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் மோடி. உலகத்தில் சிறந்த இடத்திற்கு இந்தியாவை உயர்த்திக்கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் நடைபெறும் மக்கள் விரோத குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு அமமுக இந்த கூட்டணிக்கு வர வேண்டும் என்று மோடி விரும்பினார். நாங்கள் முழு மனதோடு தேசிய ஜனநாயக கூட்டணியை தலைமையேற்றுள்ள அண்ணன் எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறோம்.
நாங்கள் எல்லாம் அம்மாவின் தொண்டர்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். புரட்சித் தலைவரின் வழி வந்தவர்கள். எங்களுக்குள் சண்டை சச்சரவு இருந்தது உண்மைதான். ஆனால் தமிழக மக்கள் நலன் கருதியும், அமமுக நலன் கருதியும் பிரதமரின் அழைப்பை ஏற்று எங்கள் மனதில் இருந்த கோபங்களை விட்டுவிட்டு, 2021ல் விட்ட அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் உருவாக்கிட எந்த தயக்கமும் குழப்பமும் இன்றி, எந்தவொரு அழுத்தமும் இன்றி இந்த கூட்டணியில் இணைத்துக்கொண்டிருக்கிறோம்.
இந்த கூட்டணிக்காக ஒவ்வொரு அமமுக தொண்டரும் தமிழ்நாடு முழுவதும் பணியாற்றுவார்கள் என்பதை பிரதமர் மோடியிடமும், எதிர்க்கடசித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடமும் தெரிவித்துக்கொள்கிறேன்.
எதிர்ப்பதிலும் சரி, ஆதரிப்பதிலும் சரி உறுதியாக இருக்க ஜெயலலிதா எங்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார். எனவே கூட்டணியில் உறுதியாக இருப்போம். மக்கள்விரோத குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறோம்.
இன்றைக்கு தமிழ்நாடே கொலை நாடாக, கொள்ளை நாடாக மாறிக் கிடக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, போதைப்பொருள் கூடாரமாக தமிழ்நாடு மாறியிருக்கிறது.
அரசு ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள், செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் போராடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இன்று மக்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலினோ தனது மகன் உதயநிதியை முதல்வராக்க முயற்சித்து கொண்டிருக்கிறார். அதை நங்கள் உறுதியாக முறியடித்து மக்களாட்சியை உருவாக்க நாம் பாடுபட வேண்டும்” என்று கூறினார்.
இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கைக்குலுக்கி கொண்டனர்.
