தனது ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 12) தள்ளுபடி செய்தது.
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது பைக் பல அடி தூரத்துக்கு பறந்து போய் விழுந்தது.
இந்தச் சம்பவத்தை அடுத்து, அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர் கைதாகி ஜாமினில் வெளிவந்தார்.
இதற்கிடையேஅதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டுவருதாக கூறி டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 06.10.2023 முதல் 05.10.2033 வரை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி மாலா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது டிடிஎஃப் வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு 6 மாதங்கள் கடந்துவிட்டாலே, நீதிமன்றத்தை நாடி புதிய லைசென்ஸ் வாங்கலாம் என்றும், மனுதாரரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு ஏற்கெனவே 3 வருடங்கள் ஆகிவிட்டது. எனவே புதிய லைசென்ஸ் வழங்க உத்தரவிட வேண்டுமென வாதிட்டார்.
அதற்கு நீதிபதி, “ஆறு மாதங்கள் கடந்துவிட்டால் நீதிமன்றத்தை நாடலாம் என்பது அவசியமில்லை. லைசென்ஸ் வேண்டுமென்றால் உரிய அதிகாரிகளை அணுக வேண்டும்” எனக்கூறி டிடிஎஃப் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
