ஈரான் சரணடைய வேண்டும்- டிரம்ப் மிரட்டல்! ஜி-7 நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு!

Published On:

| By Minnambalam Desk

Iran Trump

ஈரானின் வான்பரப்பு முழுவதையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டோம்; ஈரான் நிபந்தனையின்றி சரணடைந்துதான் ஆக வேண்டும் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். Trump Warns Iran to Surrender; G7 Nations Back Israel

அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழித்து வருகிறது இஸ்ரேல். இதற்கு அமெரிக்கா முழுமையாக ஆதரவு அளித்து வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் இடைவிடாமல் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு ஈரானும் சரியான பதிலடியை தந்து கொண்டிருக்கிறது. கடந்த 5 நாட்களாக நீடிக்கும் இருநாடுகளிடையேயான மோதலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகிறார். டிரம்ப் தமது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்ட எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் நான் சொன்னபடியே ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்வதை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது; ஈரான் தலைநகர் டெஹ்ரானை விட்டு அனைவரும் வெளியேறுங்கள் என கூறியிருந்தார்.

இதன் பின்னர் கனடாவில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற டொனால்ட் டிரம்ப், பாதியிலேயே வெளியேறினார். இந்த மாநாட்டில் இருந்து வெளியேறிய டிரம்ப் மீண்டும் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டார். அதில், ஈரானின் அதி உயர் தலைவர் கொமேனி எங்கே மறைந்துள்ளார் என்பது எங்களுக்கு தெரியும். அவர் எங்களுக்கு எளிதான டார்கெட். அவர் தற்போது பாதுகாப்பாக இருக்கிறார். அவரை நாங்கள் வெளியே கொண்டு வரமாட்டோம். இப்போதைக்கு அது நடக்காது. ஆனால் அமெரிக்காவின் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது.எங்களுடைய பொறுமையும் குறைந்து வருகிறது.

ADVERTISEMENT

ஈரான் நாட்டின் வான்பரப்பு முழுவதையும் எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டோம். ஈரானிடம் வான் கண்காணிப்பு கட்டமைப்புகள் வலிமையாக இருந்தன. ஆனால் அமெரிக்கா தயாரிப்புகளுடன் ஒப்பிட முடியாது. ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என கூறியிருந்தார்.

இதனிடையே கனடாவில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடும் ஈரானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க அனுமதிக்க முடியாது என கூறியுள்ள ஜி-7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு, இஸ்ரேலை முழுமையாக ஆதரிப்பதாகவும் அறிவித்துள்ளது. இதனால் ஈரான் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேநேரத்தில் இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்கள் அதி உக்கிரமடைந்துள்ளன என்றும் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் தலைமை அலுவலகம் உள்ளிட்டவைகளை ஈரான் தாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஈரானுக்குள் இஸ்ரேலின் மொசாத் உளவுப்படை காலூன்றி இருப்பதாகவும் இது தொடர்பாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் ஈரான் அறிவுறுத்தி இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share